/
NFNEWSFELT
சினிமா

அமரம் திரை விமர்சனம் | அசலான வாழ்க்கைக்குள் அதிரடி ஆக்‌ஷன்!

பார்வையாளர் திரையரங்கை விட்டு வெளியே வரும்போது, கதை மட்டும் நினைவில் நிற்காது; அது கொடுத்தனுப்பும் உணர்வில், ஒரு நிலப்பரப்பும் அங்கு வாழு மனிதர்களும் அவர்களுக்கு விதிக்கப்பட்ட நாம் அறிந்திராத வாழ்க்கையும் இருக்கும். அமரம் படத்தில் அவை இருக்கின்றன..

Newsfelt Admin28 ஆகஸ்ட், 20266 நிமிட வாசிப்பு14 பார்வைகள்
பகிர்:

ஒரு சிறந்த பொழுதுபோக்குத் திரைப்படம் என்பது வெறும் இரண்டு மணி நேரக் கதை மட்டுமே அல்ல. அதுவொரு முழுமையான திரை அனுபவம். பார்வையாளர் திரையரங்கை விட்டு வெளியே வரும்போது, கதை மட்டும் நினைவில் நிற்காது; அது கொடுத்தனுப்பும் உணர்வில், ஒரு நிலப்பரப்பும் அங்கு வாழு மனிதர்களும் அவர்களுக்கு விதிக்கப்பட்ட நாம் அறிந்திராத வாழ்க்கையும் இருக்கும். இதுபோன்ற படங்களில் ஒளிப்பதிவும் இசையும் ஒன்றோடு ஒன்று பிணைந்திருக்கும். இந்தப் பிணைப்புக்கு முதல் தேவை அழுத்தமான கதைக் கரு.

அடுத்து அந்தக் கருவைத் தாங்கி நிற்கும் திரைக்கதை தேங்காமல் ஓட வேண்டும். நாயகன்-நாயகி மட்டுமல்ல, துணைக் கதாபாத்திரங்களும் முழுமையுடனும் சர்வைவலுக்காக ஓடுகிறவர்களாக இருக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்படும் நடிகர்கள் அந்தப் பாத்திரங்களாகவே மாற வேண்டும். ஏற்கெனவே இயற்கையும் நிலப்பரப்பும் ஒரு முக்கிய கதாபாத்திரம் போல் பேச வேண்டும். பின்னணி இசை கதையின் பாதியைச் சொல்ல வேண்டும். இவை ஒன்றுசேரும்போதுதான் ஒரு படம் உண்மையான பொழுதுபோக்குப் படமாகவும் ஒரு முழுமையான திரையரங்க அனுபவம் தரும் சினிமாவாகவும் உயர்கிறது.

- இந்த அம்சங்கள் அனைத்தையும் ‘அமரம்’ படத்தில் கண்டு உணர முடிந்தது! எப்படியென்று பார்க்கலாம் வாருங்கள்.

குறிப்பிட்ட ஒரு நபரின் கொலையின்போது, வளரும் பத்திரிகையாளரான ஷர்மிளாவின் (நாயகி) தந்தை கொல்லப்படுகிறார். அவர் ஓர் இடதுசாரி எழுத்தாளர். தன் தந்தையைக் கொன்றது யார் என்று தெரியாமல், அந்தக் கொலையாளியைப் பழிவாங்கக் கிழக்குத் தொடர்ச்சி மலைக் கிராமங்களுக்கு அவனைத் தேடிக் கிளம்புகிறாள். ஒரு கட்டத்தில் அவனைக் கண்டுபிடிக்கும்போது, அவனே (நாயகன்) அவளுடைய காவலனாக மாறுகிறான். இப்போது இந்த இருவரையுமே அதிகாரத்தை கையில் வைத்திருக்கும் ஒரு கூட்டம் தேடித் துரத்துகிறது. தேடி வந்தவளும் தேடப்பட்டவனும் இணைந்து பயணிக்கிறார்கள். அந்தப் பயணத்தின் முடிவு என்ன ஆனது என்பதி கதை.

வாழ்வாதாரம் குறைந்த கிழக்குத் தொடர்ச்சி மலையில் உள்ள கிராமங்களை நோக்கி, அங்குள்ள மறைக்கப்பட்ட வாழ்க்கையின் பக்கமொன்றைக் களமாகக் கொண்டு ஒரு சர்வைவல் த்ரில்லர் முயன்றுள்ளார் அறிமுக இயக்குநர் திருஅருள் கிருஷ்ணா. அதில் சின்னச் சின்னத் தடுமாற்றங்கள் இருந்தாலும் ஒரு முழுமையான, விறுவிறுப்பான ‘ஆக்‌ஷன் சீக்குவென்ஸ்’கள் கொண்ட படமாகக் கொடுக்க வேண்டும் என்பதில் 95 விழுக்காடு வெற்றிபெற்றுள்ளார்.

படம் தொடங்கும் விதமே மிகுந்த விறுவிறுப்புடனும், உறைந்துபோக வைக்கும் கொடூரமான ஆக்‌ஷன் காட்சியுடனும் அமைகிறது.

மொஸார்ட் (ஜார்ஜ் மரியான்) தலைமையிலான கூலிப்படை ஏஜென்சியில் பணியாற்றும் அருகன் (ராஜன் தேஜேஷ்வர்), வறுமை காரணமாக இந்த வன்முறைப் பாதைக்குள் வந்தவன். அவனுடைய கதாபாத்திரத்தின் உண்மையான மர்மங்களைக் கொண்டிருக்கும் வரைபடத்தை இயக்குநர் மெல்ல மெல்ல விடுவித்துக்கொண்டே வந்து கிளைமாக்ஸில் நிறுத்திக்காட்டுவது அட்டகாசமான முழுமை. அந்தக் கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ள ராஜன் தேஜேஷ்வர், தனது அமைதியான கண்கள், முரட்டுத்தனமான உடல்மொழி, உணர்ச்சிகளை அடக்கி வைத்துத் தேவைப்படும்போது வெடிப்பது அறிமுகப் படத்திலேயே தமிழ் சினிமாவுக்கு நல்லதொரு உழைப்பாளி நாயகன் கிடைத்திருக்கிறார் என்று உணர் வைத்துவிடுகிறார். மொஸார்ட்டாக வரும் ஜார்ஜ் மரியான் கதாபாத்திரம் சட்டென்று முடிந்துவிடுவதும் திரைக்கதைக்கு அதன் ஆன்மாவைக் காயப்படுத்தாமல் விட்டு வைக்கிறது.

ஷர்மிளா பாரதியாக வரும் ஐரா அகர்வால் என்ற, தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்த ஒரு மார்வாடிப் பெண், ஷர்மிளா கதாபாத்திரத்தின் உணர்ச்சி மையத்தைப் புரிந்துகொண்டு நடித்திருக்கிறார். தன் தந்தையைக் கொன்றவன் என்று தெரிந்தபின்னும் அருகனுடன் பயணிக்க நேரும்போது ஷர்மிளாவிற்கு அருகன் காவலாக நிற்கும் இடங்களும், இருவருக்குள்ளும் உருவாகும் மென்மையான அண்மைகளும் அருகனின் முரட்டுத்தனத்திற்குப் பின்னுள்ள கதையை அவள் உணரும்போது ஏற்படுகிற வலியையும் அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

உயர்மட்ட அரசியல் சூழ்ச்சிகள், அதிகாரத்தின் கோர முகம், வாழ்வாதாரம் இல்லாத மலைக்கிராம மக்களின் சர்வைவல் போராட்டம் என உண்மைக்கு நெருக்கமான ஒரு கதைக் களத்தைக் கையில் எடுத்திருக்கும் இயக்குநர், திரைக்கதையில் சில இடங்களில் சில காட்சிகளை நீக்கியிருந்தால் இப்படம் இன்னும் வேகம் காட்டியிருக்கும். படத்தின் உரையாடல் கதைக் களத்தில் வாழும் மக்களின் வாழ்க்கையின் பண்பாட்டு எச்சமாகச் சுவாரசியம் கூடியிருக்கிறது.

மிக்கி ஜெ .மேயரின் இசையும் நிலப்பரப்பைக் கண் முன் நிறுத்தும் ஒளிப்பதிவும் பரத் குமாரின் ஒளிப்பதிவும் ‘அமரம்’ படத்தை அமரத்துவம் மிக்க ஒரு சுவாரசியமான முயற்சியாக மாற்றிவிடுகின்றன. வன்முறையின் அளவை மட்டும் இன்னும் மட்டுப்படுத்தியிருந்தால் ‘அமரம்’ தன் அசல் தன்மையில் இன்னும் ஒருபடி மேலோங்கியிருக்கும். இருப்பினும் இப்படமும் இயக்குநரும் அறிமுகக் கலைஞர்களும் தமிழ் சினிமாவுக்கு நல்வரவு கூர வேண்டியவர்கள்.


மதிப்பீடு 3.6 / 5

ஐந்துபேர் கொண்ட ‘நியூஸ் ஃபெல்ட்’ விமர்சனக் குழுவால் திரையரங்கில் படம் பார்த்து தரப்பட்ட பார்வைகளின் அடிப்படையில் அக்குழுவில் ஒருவரான சோழ யாழினி தொகுத்த விமர்சனம் இது. இது தனியொரு விமர்சகரின் பார்வை அல்ல. குழுவில் இடம்பெற்றவர்கள் முறையே 22, 28, 30, 34 45 ஆகிய வயது கொண்டவர்கள்.

பகிர்:

கருத்துகள் (0)

கருத்திட உள்நுழையுங்கள்.

ஏற்றுகிறது…

தொடர்புடைய கட்டுரைகள்