/
NFNEWSFELT
சினிமா

பிக்பாஸ் இணைத்து வைத்த ஜோடி! | வருகிறது ‘தி டார்க் ஹேவன்’

Newsfelt Admin14 செப்டம்பர், 20266 நிமிட வாசிப்பு8 பார்வைகள்
பகிர்:

நாட்டார் கதையை மையமாக வைத்து ஒரு முழு நீள சஸ்பென்ஸ் க்ரைம் த்ரில்லராக உருவாகி இருக்கும் திரைப்படம் 'தி டார்க் ஹெவன்' . இப்படத்தை பாலாஜி இயக்கி உள்ளார். இவர் ஏற்கெனவே 'D3' என்ற படத்தை இயக்கியவர்.

அவர் இயக்கியிருக்கும் இரண்டாவது படமான இந்த 'தி டார்க் ஹெவன்' படத்தில் பிக்பாஸ் புகழ் நட்சத்திரங்கள் சித்து, தர்ஷிகா இருவரும் இந்தப் படத்தின் மூலம் ‘பிக்பாஸ்’ ஜோடியாக இணைந்துள்ளனர். இவர்களுடன் நடிப்புக்குப் பெயர்பெற்ற ரித்விகா , வேல ராமமூர்த்தி, நிழல்கள் ரவி, ஜெயக்குமார், அருள் டி சங்கர், சத்தியா, சாப்ளின் பாலு, கோபால் மற்றும் பலர் நடித்துள்ளனர். கோதை என்டர்டெயின்மென்ட் மற்றும் எம்எஸ் ஸ்விஸ் ஃபிலிம் ஃபேக்டரி தயாரித்துள்ளன.

கொலையும் கொலை சார்ந்த ஒரு துப்பறியும் கதையாக உருவாகி இருக்கும் இதன் படப்பிடிப்பு திருநெல்வேலி ,ராமநாதபுரம், குற்றாலம் ,முக்கூடல்,தென்காசி போன்ற பகுதிகளில் இதுவரை கேமரா வெளிச்சம் படாத இடங்களில் தேடிப் பிடித்துப் படப்பிடிப்பு செய்துள்ளார்கள்.

செப்டம்பர் 18ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் வெளியாகிற இப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய அறிமுக விழா சென்னை சாலிகிராமம் பிரசாத் லேப் அரங்கில் நடைபெற்றது.

அதில் ஒளிப்பதிவாளர் மணிகண்டன் பிகே பேசும்போது,

"நான் இயக்குநர் பாலாஜியுடன் ஏற்கெனவே ’டி3 ’ படத்தில் பணியாற்றியிருக்கிறேன். இது அவருடன் பணியாற்றும் இரண்டாவது படம். வழக்கமாக மலைப் பிரதேசங்களில் அழகான இடங்களில் படிப்பு நடத்துவது என்பது வேறு. மர்மமும் திகிலும் நிறைந்த ஒரு கதைக்கு அதே இடங்களில் படப்பிடிப்பு நடத்துவது என்பது வேறு. கிரைம் திரில்லர் படங்களுக்கு இயற்கை அழகோடு மர்மமும் திகிலும் நிறைந்து காணப்படும் இடங்களாக இருக்க வேண்டும். அப்படி அழகும் மர்மமும் இணைந்த இடங்களைத் தேடி தேடிக் கண்டுபிடித்து இயக்குநர் படப்பிடிப்பு நடத்தினார். நாங்களும் அப்படிக் காடு,மலை என்று சிரமப்பட்டு சென்று படமாக்கினோம். வாகனங்கள் செல்ல முடியாத இடங்களுக்கெல்லாம் நீண்ட தூரம் படப்பிடிப்புக் கருவிகளைச் சுமந்து கொண்டு சென்று படப்பிடிப்பு நடத்தினோம். அந்த சிரமங்கள் எல்லாம் காட்சிகளைப் பார்த்துவிட்டு மற்றவர்கள் பாராட்டும் போது இப்போது தெரிவதில்லை" என்றார்.

இந்தப் படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமாகும் பிக் பாஸ் புகழ் தர்ஷிகா பேசும்போது,

" ’தி டார்க் ஹெவன்’ எனது முதல் படம். பொதுவாக எனக்கு த்ரில்லர் படங்கள் என்றால் மிகவும் பிடிக்கும். இந்தப் படத்தில் ஒளிப்பதிவு, இசை எல்லாம் சிறப்பாக உள்ளன. நடித்திருக்கும் கலைஞர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் படத்திற்காகக் கடினமாக உழைத்திருக்கிறார்கள். செப்டம்பர் 18ஆம் தேதி திரையரங்கில் சென்று இந்தப் படத்தை பார்த்து ஆதரியுங்கள். உங்களது நேர்மையான விமர்சனங்களைக் கூறுங்கள்" என்றார்.

ரித்விகா பேசும்போது,

"நிறைய த்ரில்லர் படங்கள் வருகின்றன. போலீஸ்காரர், முகமூடி மனிதர், இன்வெஸ்டிகேஷன் என்று எல்லாம் ஒரே மாதிரியான தோற்றத்திலேயே இருக்கும். ஆனால் இது கண்டிப்பாக அப்படி இருக்காது. வித்தியாசமான திரையரங்க அனுபவத்தை தரும் படமாக இது இருக்கும். ஒரே ஒரு ஷாட்டுக்காகக் கூட மூன்று மணி நேரம் நான்கு மணி நேரம் சென்று காத்திருந்து எடுத்திருக்கிறார் இயக்குநர். தொழில்நுட்ப ரீதியாகவும் நன்றாக உழைத்து இருக்கிறார்கள்.

நாங்கள் நடிப்புக் கலைஞர்கள் ஒருமுறை நடித்தால் அவர்கள் இரண்டு மடங்கு உழைத்தார்கள். இந்தப் படம் நிச்சயமாக திரையரங்கில் ஒரு திருப்தியான அனுபவத்தைத் தரக்கூடியதாக இருக்கும். ’தி டார்க் ஹெவன்’ கண்டிப்பாக நல்ல திரையரங்கு அனுபவத்தை தரும். நம்பி வரலாம். ஏமாற்றாது" என்றார்.

படத்தின் இயக்குநர் பாலாஜி பேசும்போது,

"ஒரு படத்தைப் பாதிக்கு மேல் எடுத்து முடித்து அப்படியே வைத்து விட்டு பிறகு ஆரம்பிப்பது என்பது மிகவும் சவாலான ஒரு விஷயம். மீண்டும் இந்தப் படத்தைத் தொடங்கி முடித்து இன்று நான் உங்கள் முன் நிற்பது சாதாரண விஷயம் அல்ல. அதற்கு உதவி செய்தவர்களை மறக்க முடியாது. ஒரு படத்தை முக்கால்வாசி எடுத்துவிட்டு மீண்டும் அதே படத்தை மறுபடியும் எடுப்பது என்பது மன ரீதியாக மிகவும் அழுத்தம் தரக்கூடிய தொந்தரவு தரக்கூடிய ஒரு விஷயம். அதைத் தொடர்ந்து கொண்டு செல்வது என்பது சிரமமாகத்தான் இருக்கும். அப்படி இருந்த எனது நெருக்கடியான சூழலில் சித்து சார் என்னிடம் நடந்து கொண்ட விதம் எனக்கு அவர் மீது பெரிய மரியாதையை ஏற்படுத்தியது. அவர் கடந்த காலத்தைப் பற்றி எதுவும் நினைக்காமல் இந்தப் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். கடந்த காலத்தைப் பற்றி அவர் எதுவுமே கேட்கவில்லை. அது அவரிடம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இன்று வரை சுதந்திரமாக பணியாற்றுவதற்கு அது ஒரு பெரிய காரணம். அதற்கு அவருக்கு மிகவும் நன்றி.

மிகவும் முக்கியமான விஷயம் இது ஒரு நாட்டார் கதையை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கும் த்ரில்லர் படம் என்பதுதான். டீஸர், டிரெய்லர் எல்லாம் பார்த்து விட்டு அனைவரும் நன்றாக இருக்கிறது என்று சொன்னார்கள் என்றால் அதற்கு ஒளிப்பதிவாளர் மணிகண்டனுக்குத்தான் நான் நன்றி சொல்ல வேண்டும். இந்தப் படத்தில் ரித்விகா வருவதற்கு முன்பு இந்த படத்தின் தரம் வேறு மாதிரி இருந்தது. வந்த பிறகு அது வேறு மாதிரியான உயரத்துக்குச் சென்றது. முக்கியமாக இந்தப் படத்தில் வரும் நான்கு முக்கியக் கதாபாத்திரங்களைப் பெரிதாக நம்பிக் கொண்டிருக்கிறேன் . பாரி, உமையாள், கனி இன்னொரு பாத்திரம் என இந்த நான்கையும் பிரதானமாக வைத்து நான் உருவாக்கி இருக்கிறேன்.” என்றார்.

பகிர்:

கருத்துகள் (0)

கருத்திட உள்நுழையுங்கள்.

ஏற்றுகிறது…

தொடர்புடைய கட்டுரைகள்