20 ஆண்டுகளும் புதிய தொடக்கமும் | ஊடகத்தினரைச் சந்தித்த இயக்குநர் ராம்!
"காலம் மாற மாற, கடந்த காலத்தில் நாம் கற்றுக்கொண்ட விஷயங்களை நாமே சந்தேகத்திற்கு உட்படுத்திப் பார்க்க வேண்டும்.

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனித்துவமான அழகியலையும், அழுத்தமான வாழ்வியல் தளங்களையும் உருவாக்கிய இயக்குநர் ராம், தனது எழுத்து மற்றும் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஏழு கடல் ஏழு மலை’ திரைப்படத்தின் திரையரங்க வெளியீட்டை ஒட்டி, ஊடகத்தினரை நட்பின் நிமித்தமாகச் சந்தித்துப் உரையாடினார்.தமிழ் திரையுலகில் ‘கற்றது தமிழ்’ திரைப்படம் மூலம் அடியெடுத்து வைத்து 20 ஆண்டுகள் நிறைவுபெற இருக்கும் நிலையில், இந்த ஊடகச் சந்திப்பு ஒரு பட விளம்பரத் தேவையைத் தாண்டி, இருபதாண்டு கால சினிமாப் பயணத்தின் அசைபோடலாகவும், ஆழமான கருத்துப் பகிர்வாகவும் அமைந்தது.
கற்றலை விடக் 'கற்றதை மறத்தல்' (Unlearning) முக்கியம்
சந்திப்பின் போது, தனது 20 ஆண்டுகால சினிமா அனுபவம் மற்றும் மனித வாழ்வியல் குறித்து இயக்குநர் ராம் வெளிப்படுத்திய சிந்தனைகள்: "காலம் மாற மாற, கடந்த காலத்தில் நாம் கற்றுக்கொண்ட விஷயங்களை நாமே சந்தேகத்திற்கு உட்படுத்திப் பார்க்க வேண்டும். ‘பழையன கழிதலும் புதியன புகுதலும்’ என்பது தமிழரின் மரபு. எந்த வேலையில் இருந்தாலும், மனிதன் தான் கற்றுக்கொண்டவற்றைத் தொடர்ந்து மறப்பதும் (Unlearn), புதியவற்றை ஏற்பதுமே அவனை மனிதனாக வைத்திருக்கிறது. இந்தத் தொடர் மாற்றத்தில்தான் சமூகமே முன்னேறுகிறது." என்றார்.
எளிய விஷயங்களில் பரவசம்
தொடர்ந்த் உரையாடி அவர், வாழ்க்கையின் பரபரப்பான ஓட்டத்தைப் பற்றிக் குறிப்பிட்ட ராம், எளிய தருணங்களை ரசிக்கும் மனப்பான்மையே மனிதனுக்கு மிக முக்கியம் என்றார். எவ்வளவு பரபரப்பான வாழ்க்கைச் சூழல் உருவானாலும், எளிய விஷயங்களைக் கவனிப்பதும் அவற்றிலிருந்து மகிழ்ச்சியடைவதுமே மனித மனதின் இயல்பு. வாழ்க்கையின் பெரிய துயரங்களிலிருந்தும் பதற்றங்களிலிருந்தும் நம்மை மீட்கும் அரணாக அமைவது இந்தச் சின்னச் சின்ன சந்தோஷங்களே. அடுத்து சமூகத்தால் வரையறுக்கப்பட்ட வெற்றி-தோல்வி என்ற அளவுகோல்கள் குறித்துப் பேசியவர்: "ஒரு வெற்றியாளருக்கு என்று சமூகம் சில அளவுகோல்களை (Parameters) வைத்திருக்கிறது. அந்த ரேஸை நோக்கித்தான் பெரும்பான்மை சமூகம் ஓட வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாகிறது. ஆனால், அந்தப் பொதுவான ரேஸில் நான் ஓடவில்லை. எனக்கான தனிப்பாதையில், எனது இயல்புக்கு ஏற்ற வேகத்திலேயே நான் பயணித்து வருகிறேன்."

‘ஏழு கடல் ஏழு மலை’ – முற்றிலும் புதிய அனுபவம்
தனது படைப்புத் தளம் குறித்துப் பேசுகையில், ஒரு படம் போல இன்னொன்று இருக்கக் கூடாது என்பதில் தான் கவனமாக இருந்தாலும், படைப்பாளியின் நிழல் (Shadow) அதன் மேல் விழுவதைத் தவிர்க்க முடியாது என்றார். இருப்பினும், நிவின் பாலி, சூரி, அஞ்சலி நடிப்பிலும் தமிழ் சினிமாவின் தரமான தயாரிப்பாளர்களில் ஒருவரும் மனிதநேயருமான சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகியுள்ள ‘ஏழு கடல் ஏழு மலை’ திரைப்படம், தான் இதுவரை எடுத்த படங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்ட கதைகளத்தையும், திரையரங்கில் ரசிகர்களுக்கு ஒரு புதிய விஷுவல் மற்றும் உணர்வுப்பூர்வமான அனுபவத்தையும் தரும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தினார். திரையுலகில் 20 ஆண்டுகளை நிறைவு செய்யவிருக்கும் இயக்குநர் ராமின் இந்தப் புதிய படைப்பு, தமிழ் சினிமா ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
இந்த அற்புதமான உரையாடலுக்கான ஊடகச் சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தவர் மக்கள் தொடர்பாளர் ஜான்.

கருத்துகள் (0)
ஏற்றுகிறது…


