நாய் இறைச்சிக்கு குட்-பை! தென்கொரிய உணவகங்களில் அலைமோதும் கூட்டம்!
காட்டிலிருந்து மனிதன் சமவெளி நோக்கி வந்தபோது அவனுடன் கைகோத்த நண்பன் நாய்! அதை கொன்று மாமிசமாக உண்பது பெருங்கொடுமை.. அதற்கு இப்போது தடை! எங்கே தெரியுமா?

ஒரு உணவு பழக்கத்திற்கு விடை கொடுக்கும் தருணம் எப்படி இருக்கும்? அதற்கான வித்தியாசமான காட்சிதான் இப்போது தென்கொரியாவில்.
நாய் இறைச்சி உண்பதையும், அதற்காக நாய்களை வளர்த்து விற்பதையும் படிப்படியாக நிறுத்தும் வகையில் தென்கொரியா சட்டம் இயற்றியுள்ளது. 2027 பிப்ரவரி முதல் நாய் இறைச்சி விற்பனை மற்றும் உணவகங்களில் பரிமாறுவது முழுமையாகத் தடை செய்யப்பட உள்ளது.
தடை இன்னும் அமலுக்கு வரவில்லை. ஆனால், இந்த உணவு கலாசாரத்தின் கடைசி அத்தியாயத்தைச் சுவைக்க விரும்புபவர்கள் பலரும் பாரம்பரிய நாய் இறைச்சி உணவகங்களை நோக்கி படையெடுத்து வருகின்றனர். இதனால் சில பகுதிகளில் வழக்கத்தைவிட அதிகமான மக்கள் கூட்டம் காணப்படுகிறது.
ஒருகாலத்தில் தென்கொரியாவின் பாரம்பரிய உணவுகளில் ஒன்றாகக் கருதப்பட்ட நாய் இறைச்சி, குறிப்பாக முதிய தலைமுறையினரிடையே பிரபலமாக இருந்தது. ஆனால், நகரமயமாக்கல், செல்லப்பிராணிகள் மீதான அன்பு, இளைய தலைமுறையின் மாறிவரும் உணவுப் பார்வை மற்றும் விலங்குகள் நலன் குறித்த விழிப்புணர்வு ஆகியவை இந்தப் பழக்கத்தை வேகமாக மாற்றிவிட்டன.
இப்போது முரண் என்னவென்றால், “இனி கிடைக்காது” என்ற உணர்வே சிலரை அதைச் சாப்பிடத் தூண்டுகிறது.
வரலாற்றில் அழிந்து கொண்டிருக்கும் ஒரு உணவைச் சுவைக்க மக்கள் வரிசையில் நிற்பது போல, தென்கொரியாவின் சில உணவகங்களில் இன்று காணப்படும் கூட்டம் ஒரு உணவுப் பழக்கத்தின் முடிவைக் காட்டும் காட்சியாக மாறியுள்ளது.
இது வெறும் ஒரு உணவின் மீதான தடை அல்ல. ஒரு சமூகத்தின் பண்பாடு, தலைமுறை மாற்றம், விலங்குகள் மீதான பார்வை, உலகமயமாக்கல் ஆகியவை ஒன்றோடொன்று மோதிக் கொண்டிருக்கும் ஒரு கலாசார மாற்றத்தின் தருணம்.
2027 பிப்ரவரி வந்ததும் நாய் இறைச்சி சட்டத்தின் பார்வையில் கடந்த காலமாகிவிடும்.
ஆனால், அந்த உணவைச் சுற்றியிருந்த விவாதமும் நினைவுகளும்“உணவு என்பது கலாசாரமா, காலத்தால் மாறும் பழக்கமா?” என்ற கேள்வியும் அவ்வளவு எளிதில் மறைந்துவிடாது.
கருத்துகள் (0)
ஏற்றுகிறது…



