/
NFNEWSFELT
தமிழ்நாடு

திரை விமர்சனம்: ‘போட்டோகிராபர்’ | வனத்தின் மடியில் ஒரு மாறுப்பட்ட சாகசம்!

அடர் வனத்தை கதைக் களமாகக் கொள்ளும் திரைப்படங்கள் வெறும் ‘ஜம்ப் ஹாரர்’களாக தேங்கி விடுகின்றன. ‘போட்டோகிராபர்’ அவற்றிலிருந்து எவ்வாறு மாறுபடுகிறது?

Newsfelt Admin7 ஆகஸ்ட், 20268 நிமிட வாசிப்பு7 பார்வைகள்
பகிர்:

இயற்கையின் பசுமை விரிந்துகிடக்கும் ஆட்சி, அதற்குள் நுழையும் ஓர் லட்சியம் கொண்ட இளைஞனின் துணிவு, அவனது கனவுகளைத் துரத்தும் மனப்பாங்கு இந்த மூன்றையும் அழகாக இணைத்து, ஓர் ஊக்கமூட்டும் சர்வைவல் த்ரில்லர் சினிமா அனுபவம் தரும் முயற்சியில் ‘போட்டோகிராபர்’ திரைப்படம் எத்தனை படிகள் தாண்டியிருக்கிறது? வாருங்கள் பார்க்கலாம்.

சென்னையில் புகழ்பெற்ற ஒளிப்படக் கலைஞனாக இருப்பவர் நமது நாயகன் வீரா (அஷ்ரஃப்). தன் வாழ்க்கை சாதாரணமாகச் செல்வதை அவர் விரும்பவில்லை . வாழ்க்கையில் ஒருமுறையாவது சாகசம் ஒன்றில் ஈடுபட வேண்டும் என்பது அவரது கனவு. இதனால் கொடைக்கானல் பகுதியில் உள்ள காடுகளுக்கு சென்று அங்கே காணுயிர் ஒளிப்படங்கள் எடுக்க வேண்டும் என்ற எண்ணம் வளர்கிறது. மேலும் பால்யத்தில் தன்னுடைய அம்மா சொன்ன கதைகளில் கேள்விப்பட்ட ஓர் அதிசய மரத்தை பார்க்காமல் வாழ்க்கை முடிந்துவிடக்கூடாது என்கிர வேட்கையுடன் கொடைக்கானல் காடுகளுக்கு டிரெக்கிங் புறப்படுகிறார்.

அங்கே அவரது இலக்குக் காடு ‘மதிகெட்டான் சோலை’ என்கிற அழகிய ஆனால் பொருள் பொதிந்த ஒரு வனம். அங்கே செல்வர்களில் ‘மதி’ அதாவது மூளையும் அறிவும் பேதலித்துவிடும். அதனால் பைத்தியமாகி அங்குள்ள பேய்களுக்கு இரையாகிவிடுவார்கள், எனவே அந்த பகுதிக்கு செல்ல வேண்டாம் என்று பலரும் அறிவுரை சொல்கிறார்கள். ஆனால் அறிவுரைகளையெல்லாம் சட்டை செய்யாமல் அந்தக் காட்டுக்குள் நுழைகிறார் வீரா. அதன்பிறகு படம் மெதுவாக வேகம் எடுக்கத் தொடங்குகிறது. அந்த வனத்தில் பல்வேறு அமானுஷ்யங்களை உணர்கிறார்.

மனிதன் இல்லா அந்த வனத்தில் வினோத ஒலிகள் மட்டும் கேட்கின்றன. ஒரு காட்டு நாய் இவரைத் துரத்துகிறது. இவரை போல் யாரோ ஒருவன் எதிரில் வந்து பேசுவது போன்று உணருகிறார். ஒரு கட்டத்தில் மனநிலை பாதிக்கப்பட்டவர் போல் ஆகிவிடுகிறார் வீரா. எந்தச் சூழ்நிலை வரும் என்றார்களோ அப்படியொரு சூழ்நிலையில், எதிர்பாராமல் இரண்டு மனிதர்கள் அங்கே வருகிறார்கள். அவர்களிடம் உதவியும் கேட்கிறார். ஆனால் அவர்களோ இவரது உயிரைக் கேட்கிறார்கள். அவர்களிடமிருந்து தப்பிக்கும் வீரா, தன் அம்மா சொன்ன மரத்தைப் பார்த்தாரா? உயிர் பிழைத்து ஊர் திருப்பினாரா? அவரால் சிறந்த காணூயிர் ஒளிப்படங்கள் எடுக்க முடிந்ததா? என்கிற கேள்விகளுக்கான விடையாக விரிகிறது படம்.

இயற்கையை நேசிக்கும் அசைக்க முடியாத ஆர்வத்துடன் உலகம் போற்றும் ஒளிப்படக் கலைஞராக உயர வேண்டும் என்ற கனவைத் தழுவிக் கொண்டிருக்கும் நாயகனின் கதாபாத்திரத்தை நன்றாகவே எழுதியிருக்கிறார், இப்படத்தை எழுதி, இயக்கி, தயாரித்து நடித்திருக்கும் அஷ்ரப். தங்கத் தட்டில் பிறந்து வளர்ந்த நாயகன், சானிடைசர் இல்லாமல் யாருடனும் கைகுலுக்க விரும்பாத அளவுக்கு சுத்தம் பற்றிக் கவலைப்படும் ஆள். சாதாரண பல்லியைக் கூட பார்த்து அஞ்சும் நகர வாழ்க்கை மனிதன் தான் இந்த வீரா. அப்படிப்பட்ட ஒரு நகரவாசி, விடைதெரியாத கேள்விகளைக் கொண்டுள்ள ஒரு சபிக்கப்பட்ட வனத்த்தின் சூழலுக்கு நுழைந்து, அங்கே அவன் மெல்ல மாறிக் கொள்ளும் தருணங்களை படத்தின் முதல் பாதியில் ஈர்க்கும் அம்சங்களுடன் காட்சிகளாக எழுதியிருந்த விதமும் அவற்றை காட்சிகளாக எக்ஸிக்யூட் செய்திருந்த விதமும் மிக நன்று.

முதல் பாதியில் இவருடைய தந்தையும் காதலியும் இவர் என்ன ஆனார் என்று அதே காட்டுக்குள் வந்து தேடுகிறார்கள். அவர்களுக்கு அவ்வளவாக அமானுஷ்யங்கள் ஏற்படாவிட்டாலும் சில ஜம்ப் ஹாரர்களே அவர்களை பயமுறுத்தப் போதுமானதாக இருக்கிறது. ஒரு கட்டத்தில் காதலி வீரா உயிரோடு இருப்பதை கண்டுபிடிக்கிறார். ஆனால் இவர் திரும்பி வரமாட்டேன் என்று அடம் பிடிக்கிறார். தாய் சொன்ன அதிசய மரத்தை பார்த்துவிட்டு தான் வருவேன் என்றும் சொல்கிறார். காதலியையும் அந்தக் காட்டுக்கு இரையாக்கப் போகிறாரா என்று எண்ணிக் கொண்டிருக்கும்போது நிகழும் திருப்பம் சற்றும் எதிர்பாராத ஒன்று.

குடும்ப பிஸ்னஸ் என்கிற வாழ்க்கையில் பாதுகாப்பான பாதையைத் தவிர்த்து, தன்னுடைய தனித்த அடையாளத்தை உருவாக்க வேண்டும் என்கிற வீராவாக அஷ்ரப் நடிப்பால் கவர்கிறார். அவனது காதலி தர்ஷினி (ஜனனி சாமிநாதன்) தரும் ஊக்கமும், திறமையான டிஜிட்டல் கலைஞரான நண்பன் கபிலன் (கருணாகரன்) வழங்கும் உறுதுணையும் வீரா கதாபாத்திரத்தை முன்னோக்கி நகரச் செய்யும் காட்சிகளும் மிதமான தாக்கத்துடன் உள்ளன. உள்ளூர் மக்களின் எச்சரிக்கைகளைப் புறக்கணித்தபடியே, மேற்கு தொடர்ச்சி மலையின் மர்மான அந்த மதிகெட்டான் சோலை வனத்தின் அழகையும் அதன் பின்னணியில் வீரா நிகழ்தும் சாகசங்களும் கவர்கின்றன. பின்னர் அமானுஷ்ய காட்சிகள் தொடங்கும்போது ‘பேச்சி’ படத்தில் நண்பர்கள் குழு சென்று சிக்கிகொள்ளும் நினைவு வந்துபோகிறது.

ஆனால், அக்காட்டின் உள்ளே செல்ல செல்ல, வீரா எதிர்பாராத சந்திக்கும் சவால்களும் அவனது உடல் சக்தியையும் மனத் திடத்தையும் பரிசோதனைக் களத்தில் ஏற்றிப் பார்க்கும் மர்மமான அனுபவங்கள், குறிப்பாக விசித்திரமான காட்சித் தோற்றங்கள், குழப்பமூட்டும் பாதைகள், உயிர் பிழைப்புக்கான போராட்டம் இவை அனைத்தும் தரமான காட்சிகளாக (வெகுசில ஜம்ப் ஹாரர்கள் மட்டுமே) வடிவமைக்கப்பட்டு திரைக்கதைக்கு ஒரு மர்மத் தன்மையையும் பதற்றத்தையும் உருவாக்குகின்றன. இந்த களத்தில் நாயகன் எதிர்கொள்ளும் காட்சிகளுடன், அவனுடைய அம்மா (தேவி மகேஷ்) குறித்த நினைவுத் துணுக்குகள் திரைக்கதையின் இடையிடையே வந்து நெகிழச் செய்கிறது. அந்தக் காட்சிகள் வீராவின் உள்ளார்ந்த மாற்றத்திற்கு ஒரு உணர்ச்சி நிறைந்த ஆழத்தை அளிக்கின்றன.

இந்த ஆக்கபூர்வமான ‘சர்வைவல்’ நாடகத்தை எந்தவித தேவையற்ற வாணிகச் சலனங்களும் இல்லாமல், தனது மையக் கதையைத் தழுவியே உருவாக்கியதற்காக எழுத்தாளர்-இயக்குநர் அஷ்ரஃப்பை பாராட்டி தமிழ் சினிமாவுக்கு நல்வரவு கூறலாம். வீராவாக அவர் வெளிப்படுத்தும் கட்டுப்பட்ட நடிப்பு இயல்பாகவும் நம்பிக்கைக்குரியதாகவும் இருப்பதால், அந்தக் கதாபாத்திரத்தின் வளர்ச்சி நமக்கு நெருக்கமாக உணரப்படுகிறது. கருணாகரன் மீண்டும் ஒரு நம்பகமான நடிப்பை வழங்க, அனுபவமிக்க ஆடுகளம் நரேன் மற்றும் வேலா ராமமூர்த்தி தங்கள் துணை வேடங்களுக்கு உண்மைத்தன்மையையும் கம்பீரத்தையும் சேர்க்கின்றனர்.

காட்சிமொழியில் இயற்கையின் பிரம்மாண்டத்தையும் அதன் மர்மங்களையும் கொண்டுவர இப்படத்தின் மிகப் பெரிய பலம் அதன் ஒளிப்பதிவே. அடக்க முடியாத காட்டின் அழகை அசரீரமாகப் பதிவு செய்யும் அந்த காட்சிகள் கண்களை கவர்கின்றன. இயற்கை நிலப்பரப்புகளின் பரந்த விரிவும், கதைக் களத்துக்குள் உள்ளிழுக்கும் சூழலமைப்பும் திறமையாக உருவாக்கப்பட்ட ஒலி வடிவமைப்பும் சேர்ந்து ஓர் ஈர்க்கும் ‘சர்வைவல் டிராமா’ திரை அனுபவத்தை படம் தருகிறது.

துணிவு, தன்னறிவு, மனிதன் - இயற்கை இடையிலான இணைப்பு மற்றும் பிணைப்பு ஆகியவற்றை தர்க்கத்துடன் ஆராயும் இப்படம், கடைசி ஷாட்டுக்குப் பிறகு மனதில் நீடிக்கும் ஒரு உணர்ச்சி அதிர்வைத் தருகிறது.

தனித்துவமான கரு, நேர்மையான, நம்பகமான நடிப்பு, காட்சித் தொகுப்பில் செம்மை இந்த மூன்றையும் திறம்படக் கையாண்டதால் ‘Photographer’ ஒரு மனம் தொட்ட சர்வைவல் சாகசமாக ஈர்க்கிறது. எதிர்ப்புகளுக்கு மத்தியில் கனவைத் தொடர்ந்து செல்லும் ஒரு இளைஞனின் மனவலிமையையும், அவன் அடையும் உள்ளார்ந்த வளர்ச்சியையும் இந்த படம் அழகாகக் காட்சிகளின் வழிக் கொண்டாடுகிறது.

மதிப்பெண் 3.5 / 5


விமர்சகர் குறிப்பு:

5 பேர் கொண்ட நியூஸ்ஃபெல்ட் விமர்சனக் குழுவின் தொகுக்கப்பட்ட இறுதி வடிவத்தையே இங்கே நீங்கள் வாசித்தீர்கள்.

tags: Ashraf, Janani Swaminathan, Karunakaran, Uriyadi Siva, Aadukalam Naren, Devi Mahesh

பகிர்:

கருத்துகள் (0)

கருத்திட உள்நுழையுங்கள்.

ஏற்றுகிறது…

தொடர்புடைய கட்டுரைகள்