2050க்குள் 720 சதுர கி.மீ வனப்பகுதியை தமிழ்நாடு இழக்கும்! என்ன சொல்கிறது அண்ணா பல்கலை ஆய்வு?
அண்ணா பல்கலைக்கழக ஆய்வாளர்கள் 929 காப்புக் காடுகளில் கள ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர்.

சென்னை: காலநிலை மாற்றம் காரணமாக, 2050ஆம் ஆண்டுக்குள் தமிழகத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையின் வனச்சூழலில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படக்கூடும் என்று அண்ணா பல்கலைக்கழக ஆய்வு எச்சரித்துள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் காலநிலை மாற்றம் மற்றும் பேரிடர் மேலாண்மை மையம் (CCCDM) மேற்கொண்ட இந்த ஆய்வு Scientific Reports இதழில் வெளியிடப்பட்டுள்ளது.
ஆய்வின்படி, அதிகரித்து வரும் வெப்பநிலை, மழைப்பொழிவில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் காலநிலை மாறுபாடுகள் காரணமாக, 2021–2050 காலகட்டத்தில் தமிழக மேற்கு தொடர்ச்சி மலையின் பல பகுதிகளில் வனங்களின் இயல்பே மாறக்கூடும். வெப்பமண்டல பசுமைமாறா காடுகள் (Evergreen forests) சுமார் 248.72 சதுர கி.மீ. பரப்பளவையும், இலையுதிர் காடுகள் (Deciduous forests) சுமார் 720.21 சதுர கி.மீ. பரப்பளவையும் இழக்கக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது அதே நேரத்தில், வறண்ட பகுதிகளில் காணப்படும் முட்செடிக் காடுகள் (Thorn forests) சுமார் 968.93 சதுர கி.மீ. வரை விரிவடையக்கூடும்.
அண்ணா பல்கலைக்கழக ஆய்வாளர்கள் 929 காப்புக் காடுகளில் கள ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர். கடல் மட்டத்திலிருந்து 180 மீட்டர் முதல் 2,637 மீட்டர் உயரம் வரையிலான பகுதிகள் இந்த ஆய்வில் உள்ளடக்கப்பட்டுள்ளன.மாவட்ட வாரியாக ஏற்படக்கூடிய மாற்றங்கள் கோயம்புத்தூர் மாவட்டத்தில், 50 சதுர கி.மீ.க்கும் அதிகமான பசுமைமாறா காட்டு வாழிடமும், சுமார் 24 சதுர கி.மீ. இலையுதிர் காட்டு பகுதியும் இழக்கப்படலாம். அதேசமயம் முட்செடி தாவரங்கள் 74 சதுர கி.மீ.க்கும் அதிகமாக விரிவடையக்கூடும். முக்கியமான ஆனைமலை நிலப்பரப்பு, தாவர அமைப்பில் மிகப்பெரிய மாற்றத்தை சந்திக்கக்கூடிய பகுதிகளில் ஒன்றாக ஆய்வு குறிப்பிடுகிறது.
ஈரோடு மாவட்டத்தில், சுமார் 183 சதுர கி.மீ. இலையுதிர் காடுகள் எதிர்காலத்தில் தங்களுக்கு ஏற்ற வாழிடத்தை இழக்கக்கூடும். இந்தப் பகுதிகளில் பெரும்பாலானவை முட்செடிக் காடுகளாக மாறக்கூடும். திண்டுக்கல், தருமபுரி, திருப்பூர் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களிலும் இதேபோன்ற மாற்றங்கள் ஏற்படக்கூடும் என ஆய்வு தெரிவிக்கிறது. திண்டுக்கல்லில் பசுமைமாறா மற்றும் இலையுதிர் காடுகள் கணிசமாகக் குறையக்கூடும். அதே நேரத்தில் முட்செடி காடுகள் சுமார் 88 சதுர கி.மீ. வரை அதிகரிக்கக்கூடும்.திருநெல்வேலி மாவட்டத்தில் 120 சதுர கி.மீ.க்கும் அதிகமான ஈரப்பதம் நிறைந்த வனச்சூழல் பாதிக்கப்படலாம். உயரமான மலைப்பகுதிகளுக்கும் பல்லுயிர் வளத்திற்கும் பெயர் பெற்ற நீலகிரி மாவட்டத்திலும் பசுமைமாறா காடுகள் குறையக்கூடும் என ஆய்வு எச்சரிக்கிறது.
இது வெறும் மரங்கள் குறைவது மட்டுமல்ல!
ஆய்வாளர்களின் கூற்றுப்படி, முட்செடிக் காடுகள் விரிவடைவது சுற்றுச்சூழல் சீரழிவின் அறிகுறியாகும். பசுமைமாறா காடுகளுடன் ஒப்பிடும்போது, முட்செடி சூழல் குறைவான சிறப்புத் தாவரங்கள் மற்றும் விலங்குகளையே தாங்கும். எனவே இந்த மாற்றம் வெறும் வனப்பரப்பின் மாற்றமாக மட்டும் இல்லாமல், பல்லுயிர் வளத்திற்கும் நீர்வளத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.
சுற்றுச்சூழல் ஆர்வலர் ஓசை காளிதாசன், யானைகள் சமீபத்தில் தொட்டபெட்டா சிகரத்தில் காணப்பட்டதையும், இதுபோன்ற நிகழ்வு முன்பு பதிவாகாததையும் சுட்டிக்காட்டியுள்ளார். அதேபோல், முன்பு 1,000 மீட்டர் உயரத்திற்கு மேல் அரிதாகக் காணப்பட்ட மயில்கள் தற்போது 2,000 மீட்டருக்கும் அதிகமான உயரத்தில் காணப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இது காலநிலை மற்றும் சுற்றுச்சூழல் மாற்றங்கள் நம் கண் முன்னேயே நடைபெறுவதற்கான அறிகுறிகள் என அவர் கூறியுள்ளார். மேலும், தென்னிந்தியாவின் பல முக்கியமான ஆறுகளுக்கு பசுமைமாறா காடுகள் முக்கிய நீராதாரமாக இருப்பதால், இந்தக் காடுகளின் சீரழிவு தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களின் நீர்வளத்தையும் மக்களின் வாழ்வாதாரத்தையும் நேரடியாக பாதிக்கக்கூடும் என அவர் எச்சரித்துள்ளார்.
மேற்கு தொடர்ச்சி மலைகளைப் பாதுகாக்க, மாதவ் காட்கில் குழு அறிக்கையின் பரிந்துரைகளை மத்திய மற்றும் மாநில அரசுகள் நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.2011ஆம் ஆண்டு மேற்கு தொடர்ச்சி மலை சூழலியல் நிபுணர் குழு (WGEEP) சமர்ப்பித்த இந்த அறிக்கை, மேற்கு தொடர்ச்சி மலையின் பாதுகாப்பு மற்றும் நிலையான மேலாண்மைக்கான முக்கியமான பரிந்துரைகளை முன்வைத்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை மாறுகிறது. காடுகள் மாறுகின்றன. நீரின் எதிர்காலமும் கேள்விக்குறியாகிறது.
கருத்துகள் (0)
ஏற்றுகிறது…
