ஏதிலித் தமிழர் தாயகம் திரும்ப வழி திறந்த இலங்கை – ஐ.நா. பாராட்டு
தற்சமயம் 58 ஆயிரம் ஈழத் தமிழ் உறவுகள் தமிழ்நாட்டின் ஏதிலியர் முகாம்களில் வசிக்கிறார்கள். பலர் காவல்நிலையப் பதிவுடன் வாடகை வீடுகளில் வசிக்கின்றனர்.

இந்தியாவில் நீண்டகாலமாக தஞ்சமடைந்து வாழ்ந்து வரும் இலங்கைத் தமிழர் அகதிகள் தாங்களாக முன்வந்து தாயகம் திரும்பும் செயல்முறையை விரைவுபடுத்தும் வகையில் குடியேற்ற நடைமுறைகளை எளிதாக்க இலங்கை அரசு எடுத்துள்ள முடிவுக்கு ஐக்கிய நாடுகள் சபை (ஐ.நா.) வரவேற்பு தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கை, பல ஆண்டுகளாக இடம்பெயர்ந்து வாழும் அகதிகளுக்கு பாதுகாப்பான மற்றும் கண்ணியமான மீள்குடியேற்றத்திற்கு வழிவகுக்கும் முக்கிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.
இலங்கைக்கான ஐ.நா.வின் வாழ்விட ஒருங்கிணைப்பாளரும், பொதுச் செயலாளரின் பிரதிநிதியுமான மார்க் ஆண்ட்ரே ஃபிரான்ச் வெளியிட்டுள்ள அறிக்கையில், அகதிகள் தங்களது விருப்பத்தின் அடிப்படையில் தாயகம் திரும்புவதற்கான நடைமுறைகளை இலங்கை அமைச்சரவை எளிதாக்கியிருப்பது வரவேற்கத்தக்கது எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்த மீள்குடியேற்றப் பணிகளில் அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர் ஆணையம் (UNHCR) தொடர்ந்து ஒத்துழைப்பையும் ஆதரவையும் வழங்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் 1983ஆம் ஆண்டு தொடங்கிய உள்நாட்டுப் போரின் பின்னணியில், தமிழர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டதால், ஆயிரக்கணக்கானோர் அகதிகளாக இந்தியாவின் தென்முனையும் அவர்களுடைய தொப்புள் கொடி சகோதரர்கள் வாழும் மாநிலமுமான தமிழ்நாட்டில் கடல் மார்க்கமாக தப்பி வந்து தஞ்சமடைந்தனர். மேலும் ஆயிரக்கணக்கானோர் ஏதிலிகளாக உலகின் பல நாடுகளுக்கு புலம்பெயர்ந்தனர். அந்தச் சூழலில், கடந்த 1983ஆம் ஆண்டு முதல் தமிழகத்துக்கு மட்டும் 3 லட்சத்து 4 ஆயிரத்து 269 பேர் அகதிகளாக வந்துள்ளனர். இவர்களில் சுமார் 2 லட்சத்து 12 ஆயிரம் பேர் UNHCR மற்றும் இந்திய, தமிழக அரசுகளின் ஒருங்கிணைப்பில் இலங்கைக்கு திரும்பிச் சென்றுள்ளனர்.
தற்போது, தமிழகத்தில் உள்ள 108 அகதி முகாம்களில் சுமார் 58 ஆயிரம் இலங்கைத் தமிழர்கள் தங்கியுள்ளனர். முகாம்களுக்கு வெளியே காவல் நிலையங்களில் பதிவு செய்து வாழும் இலங்கைத் தமிழர்களின் எண்ணிக்கை 34 ஆயிரம் ஆகும். இதனுடன், ஒடிசா மாநிலத்தின் மால்கன்கிரி முகாமிலும் சிலர் தங்கியுள்ளனர்.
இந்நிலையில், தாயகம் திரும்ப விரும்புவோருக்கான நடைமுறைகளை இலங்கை அரசு சீரமைத்துள்ளது. இதன்படி, 2006 ஜூன் 1ஆம் தேதிக்கு முன்பு இலங்கையை விட்டு வெளியேறியவர்களாக இருக்க வேண்டும். மேலும், இந்தியாவில் உள்ள இலங்கைத் தூதரகம் மூலம் தங்கள் குடியுரிமை உறுதிப்படுத்தப்பட்டிருக்க வேண்டும். அவர்கள்மீது கொலை, துரோகம் உள்ளிட்ட கடுமையான குற்றச்சாட்டுகள் இல்லாததையும் உறுதி செய்ய வேண்டியுள்ளது. இந்த நிபந்தனைகளை பூர்த்தி செய்பவர்களுக்கு தற்காலிக வெளிநாட்டு கடவுச்சீட்டு வழங்கப்பட்டு, இலங்கைக்கு திரும்ப அனுமதி அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை ஊடகத் துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ கூறுகையில், UNHCR வழியாகவும் தனிப்பட்ட முறையிலும் திரும்ப விரும்பும் அகதிகளுக்கு இந்தத் திட்டம் பயன்படும் என்றும், அவர்கள் பாதுகாப்பாகவும் ஒழுங்குபடுத்தப்பட்ட முறையிலும் தாயகம் திரும்புவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
பல தசாப்தங்களாக நீடித்து வரும் அகதி பிரச்சினைக்கு ஒரு நிலையான தீர்வை நோக்கி நகரும் முயற்சியாக இந்த நடவடிக்கை பார்க்கப்படுகிறது. எனினும், திரும்பிச் செல்லும் அகதிகளின் பாதுகாப்பு, வாழ்வாதார நிலைத்தன்மை மற்றும் சமூக ஒருங்கிணைப்பு போன்ற அம்சங்கள் உறுதி செய்யப்பட்டால்தான் இந்த முயற்சி முழுமையான வெற்றியை அடையும் என நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.
கருத்துகள் (0)
ஏற்றுகிறது…
