/
NFNEWSFELT
சினிமா

பத்தா விமர்சனம் | ஊரே நடுங்கும் ஒருவன் பேர் வாங்கும் கதை!

படத்தின் நாயகன் விஜய் சேதுபதி என்றால், கதையின் நாயகன் சிறுவன் சாய் ப்ரித்வி ராஜ். பயம், நடுக்கம், அப்பாவித்தனம் என நடிப்பில் கைதட்டல் வாங்குகிறான்.

Newsfelt Admin2 அக்டோபர், 20265 நிமிட வாசிப்பு
பகிர்:

ஊரையே பயந்து நடுங்க வைக்கிற ரவுடி ‘பத்தா’வை, எட்டு வயது பள்ளிச் சிறுவன் ஒருவன் எட்டே நாட்களில் திருத்தி நல்லவனாக்குகிறான். அது எப்படி, ஏன் என்பதுதான் இயக்குநர் பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் வெளிவந்துள்ள ‘பத்தா’வின் சுவாரஸ்யமான கதைக்களம்!

இரக்கமில்லாத, மூர்க்க குணம் கொண்ட கேங்ஸ்டராக இருக்கும் பத்தாவைக் (விஜய் சேதுபதி) கண்டால் அந்த ஏரியாவே நடுங்குகிறது. அதே ஊரில் வசிக்கும் சபரி (சாய் ப்ரித்வி ராஜ்) என்ற பள்ளிச் சிறுவனுக்கும் பத்தா என்றால் பெரும்பயம். ஒருநாள் கோடை விடுமுறையில், தனக்குச் சொந்தமான விளையாட்டுப் பொருளை எடுக்க யாருக்கும் தெரியாமல் பள்ளிக்குச் செல்கிறான் சபரி. அங்கே கழிவறையில் பத்தா இருப்பது தெரியாமல் கதவைப் பூட்டிவிட்டு வந்துவிடுகிறான். மீண்டும் சென்று கதவைத் திறந்தால் பத்தா தன்னைக் கொன்றுவிடுவானோ என்ற பயத்தில், அவனை எட்டு நாட்கள் அங்கேயே அடைத்து வைக்கிறான். இந்தச் சம்பவத்திற்குப் பிறகு பத்தாவின் வாழ்வில் நடக்கும் மாற்றங்களும், அவன் தவறுகளை உணர்ந்து திருந்துவதுமே படத்தின் மீதிக்கதை.

பத்தாவாக வரும் விஜய் சேதுபதி, ஆரம்பக் காட்சியில் ஊர் மக்கள் மத்தியில் ஒரு இளைஞனின் கையை உடைத்துத் தனது ரத்தவெறியைக் காட்டும்போது ‘படம் முழுக்க வெட்டுக்குத்துதான் போலிருக்கிறது’ என்ற எண்ணத்தையே ஏற்படுத்துகிறார். ஆனால், கழிவறையில் சிக்கும் நாட்களில் டானுக்கான கம்பீரம் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து, உயிர் பிழைக்கக் கண் கலங்கித் தவிக்கும் இடங்களில் அசத்துகிறார். தனது தவறுகளை உணர்ந்து திருந்திய பின், அவரது நடவடிக்கைகளில் சில கோமாளித்தனங்கள் வெளிப்பட்டாலும், அதை ஏற்று நடித்திருக்கும் அவரது அர்ப்பணிப்பான நடிப்பு பாத்திரத்திற்கு உயிரூட்டியிருக்கிறது.

கணவனின் வன்முறைச் செயல்களால் ஏற்படும் அழுத்தத்தையும், எப்போதாவது அவன் காட்டும் அன்பில் நனையும் மனைவியின் உணர்வுகளையும் லிஜோமோல் ஜோஸ் வழக்கம்போல மிக இயல்பாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

படத்தின் நாயகன் விஜய் சேதுபதி என்றால், கதையின் நாயகன் சிறுவன் சாய் ப்ரித்வி ராஜ். பயம், நடுக்கம், அப்பாவித்தனம் என அத்தனை உணர்ச்சிகளையும் உடல் மொழியிலும் முகபாவத்திலும் கொண்டுவந்து கைதட்டல் வாங்குகிறான். பத்தாவிடம் விசும்பலோடு பயத்தை வெளிப்படுத்தும் காட்சியில் நெகிழவும் வைக்கிறான். மகளாக வரும் சஹஸ்ரா ஸ்ரீ, அர்ஜுன் சிதம்பரம், ஹரிகிருஷ்ணன், சாந்தி பாலசந்தர், விஷ்ணு கோவிந்த், பாலமுருகன், அஜய் கோஷ், தீபா வெங்கட் உள்ளிட்ட துணை கதாபாத்திரங்களும் தங்கள் பங்களிப்பைக் குறையின்றிச் செய்திருக்கிறார்கள்.

ஒரு ரவுடி தன் தவறுகளை உணர்ந்து திருந்துகிறார் என்ற எளிய ஒன்லைனைத் தனது திரைக்கதைச் சாதுரியத்தால் ரசனைக்குரியதாக மாற்றியிருக்கிறார் இயக்குநர் பாலாஜி தரணிதரன். கழிவறைக்குள்ளேயே நடக்கும் சம்பவங்களில் தண்ணீர் தொட்டி, வாலி, பாம்பு, நொறுக்கப்பட்ட பொறை, பெயர் கிழிக்கப்பட்ட நோட்டுப் புத்தகம் எனச் சிறிய விஷயங்களைக்கூட நகைச்சுவைக்கும், எமோஷனுக்கும், ட்விஸ்ட்டுக்கும் பயன்படுத்தியிருப்பது இயக்குநரின் கெட்டிக்காரத்தனம்!

சிறுவன் தப்பிப்பதற்காகச் செய்யும் போராட்டங்கள் இரண்டாம் பாதியில் கொஞ்சம் நீளமாகத் தெரிந்தாலும், கழிவறைக்குள் மூடியிருக்கும் பள்ளிக்கு பத்தா ஏன் சென்றான் என்ற கேள்விக்கான பதிலை க்ளைமாக்ஸில் இணைத்த விதம் ஒரு நல்ல சிறுகதையின் நேர்த்தியைக் கொடுக்கிறது.

தொழில்நுட்ப ரீதியாகவும் படம் வலுவாக அமைந்துள்ளது. செல்வகுமார் எஸ்.கே-வின் ஒளிப்பதிவு 80-களின் சினிமா உணர்வையும், டென்ட் கொட்டாய் காலத்து லைட்டிங் நேர்த்தியையும் அப்படியே கடத்துகிறது. சாய் அபயங்கரின் பின்னணி இசை காட்சிகளின் எமோஷனல் மதிப்பை உயர்த்துகிறது; ‘பத்தாவோட ஒத்த டான்’ பாடல் தாளம் தட்ட வைப்பதோடு, ‘மகளே’, ‘மொழியே’ பாடல்கள் உணர்வுப்பூர்வமான தொடுதலைத் தருகின்றன. 40 ஆண்டுகள் பின்னோக்கிய காலக்கட்டத்தை அச்சுபிசகாமல் கொண்டுவந்ததில் கலை இயக்குநர் மற்றும் ஆடை வடிவமைப்பாளரின் உழைப்பு தெரிகிறது.

கெட்டவன் திருந்தி நல்லவனாகிற வழக்கமான கதைதான் என்றாலும், அதில் விறுவிறுப்பு, சுவாரஸ்யம், நகைச்சுவை என கமர்சியல் மசாலாக்களைப் பதமாகத் தாளித்துக் கொட்டி, 'பத்தா'வை வெற்றிகரமான கலகலப்பான படைப்பாக மாற்றியிருக்கிறது பாலாஜி தரணிதரன் - விஜய் சேதுபதி கூட்டணி!

மதிப்பெண் 4.2/5

பகிர்:

கருத்துகள் (0)

கருத்திட உள்நுழையுங்கள்.

ஏற்றுகிறது…

தொடர்புடைய கட்டுரைகள்