ஏழு கடல் ஏழு மலை விமர்சனம் | நம்மை நமக்கு மீட்டுக் கொடுக்கும் காதலும் நேயமும்
இரண்டு பெட்டிகளைக் கடந்து போக முடியாத இந்தக் கதைக்குள், வளமான வானத்திலிருந்தும் வனத்திலிருந்தும் தொலைந்துபோன பாலை நிலத்தின் வறட்சியும், ஆதரவற்ற மனித மிச்சங்களும் வந்து சேர்கின்றன.

தீபாவளியன்று மதுரைநோக்கிச் செல்லும் ஒரு ரயில். அதில் ஓடி வந்து ஏறும் ஓர் தோழிலாளி. அவன் பயணிக்கும் அதே பெட்டியில் தமிழின் ஆதியும் அந்தமும் அறிந்த சாகாவரம் பெற்ற ஒருவனும் பயணிக்கிறான். அதே பெட்டியில் வசிக்கும் ஒரு தாய் எலி, புதிதாய் ஈன்ற தன் குட்டிகளோடு வசிக்கிறது. சாகாவரம் பெற்றவனோ தொல்காப்பியமும் திருக்குறளும் சொல்லித் தந்த அறத்தை மனதில் ஏந்தி வாழும் அவனது இதயம், முடிவற்ற தனிமையையும் அகவலியையும் சுமந்தபடி, பல்வேறு நிலங்களையும் காலங்களையும் கடந்து தன் காதலையும் அது கொடுத்த வலியின் நீட்சியையும் தேடுகிறது. இந்தப் பயணத்தில் அந்தத் தொழிலாளியும் சாகாவரம் பெற்றவனும் முரண்களில் மோதிப் பிரிவதுதான் படம்.
உலகப் புகழ் பெற்ற எழுத்தாளர் ஜார்ஜ் லூயிஸ் போர்ஹெஸ் தனது ‘The Immortal’ சிறுகதையில், “முடிவற்ற வாழ்வு என்பது மனிதனின் உணர்வுகளை மரத்துப்போகச் செய்யும்” என்பார். சாகவரம் பெற்றவனாக வரும் நிவின் பாலியின் கதாபாத்திரம் வழியாக அந்த மரத்துப்போன தன்மையை ‘உயிர்க் கருணையாக’ மாற்றிக் காட்டுகிறார் ராம்.
முதல் நாள் வரை மக்கள் நெரிசலாய் திமிறிக்கொண்டு பயணம் செய்து களைத்த அதே ரயில் மிகச் சரியாகத் தீபாவளி நாளில் யாருமற்று வெறுமையுடன் மதுரை நோக்கி விரைகிறது. அந்த ஒரு நாளில், எட்டாயிரம் ஆண்டுகளாக மரணமற்று வாழும் பெயரற்ற ஒருவன் பயணிக்கும் அதே பெட்டியில்—மதுரையிலிருந்து தன் மனைவியின் வயிற்றில் இருக்கும் ஆறு மாதக் குழந்தையாக மகனையும் மனைவியையும்பிரிந்து துபாய் கட்டிட வேலைக்குச் சென்று, மீண்டும் சொந்த ஊர் திரும்பும் எளிய மனிதன் (சூரி) இரண்டு சூட்கேஸ்களோடு நுழைகிறான். எளியவனின் அறியாமையும் கேள்விகளும், பதிலுரைக்கும் எட்டாயிரமாண்டு மரணமற்றவனின் வாழ்வுமாகத் திரைக்கதை மெல்ல மெல்ல தீப்பிடித்து எகிறுகிறது.
இரண்டு பெட்டிகளைக் கடந்து போக முடியாத இந்தக் கதைக்குள், வளமான வானத்திலிருந்தும் வனத்திலிருந்தும் தொலைந்துபோன பாலை நிலத்தின் வறட்சியும், ஆதரவற்ற மனித மிச்சங்களும் வந்து சேர்கின்றன.

மனிதர்கள் மட்டுமே உயிர்களல்ல; மண்ணில் உயிர்க்கும், அசையும் அனைத்துயிர்களும் பொதுவானவை. ஜாதி, மதம், இனம், சட்டம் என எழுதி வைக்கப்பட்ட அனைத்தையும் ஆதியின் புள்ளியிலிருந்து கண்டுவரும் ஓருயிர், புறக்கணிக்கப்படும் ஓர் எலியின் வழியே முழு வாழ்வியலையும் புரிய வைக்கிறது. எலிக் குஞ்சுகள் மிக பத்திரமாக மாற்றாந் தாயிடம் மார்பருந்தி விடைபெறும் இடம், அனைவருக்கும் அன்பை மூட்டை கட்டித் தந்தனுப்புகிறது. ரஷ்ய மேதை தஸ்தயெவ்ஸ்கி, “மனிதகுலத்தை ஒட்டுமொத்தமாக நேசிப்பது எளிது, ஆனால் உண்மையான யதார்த்தத்தின் மீதோ எளிய உயிர்கள் மீதோ அக்கறையாகக் காட்டுவது கடினம்” என்பார். ஸ்டீபன் கிங்கின் ‘The Green Mile’ நாவலைத் தழுவிய திரைப்படத்தில் வரும் ‘ஜிங்கிள்ஸ்’ எலியைப் போல, ராமின் இந்த தாய் எலி, சாகாவரம் பெற்றவனின் பாலின்றி மரணித்த அவன் குழந்தையின் நீட்சியாக வருகிறது. உலகில் ஒவ்வொரு உயிருமே இன்னொரு உயிரின் நீட்சிதான் என்பதை அறியாத மனிதன் அந்த சக உயிர்களிடம் இழந்த பச்சாதாபத்தை மீட்டெடுக்கும் வாழ்வின் எதிர்பாராத ஓட்டமாக மாறுகிறது இந்த ரயில் பயணம்.
சாகாவரம் பெற்றவன் வாழும் எல்லாக் காலத்திலும் முகம் மாறாத அதே தேவதையை ஏங்கிக் காத்திருந்து தேடும் நாயகனுக்கு ஞாபகங்கள் தொலைவதில்லை. தொலைதூர மலையில் மீச்சிறு புள்ளியாக அவள் முகம் தென்பட்டாலும், அவளது வாசனையைச் சேமித்து வைத்திருக்கும் நுட்பத்தில் அவள்தான் என்று அறிந்துவிடுகிறான். அவளோ எல்லாப் பிறவியிலும் அதே வாசனையோடும், பூ முகத்தோடும், பேரன்போடும் பிறக்கிறாள், அன்பை அள்ளிக் கொடுக்கிறாள், பிரிகிறாள். ராமின் எல்லா படங்களிலும் கதாபாத்திரமாக உருமாறிவிடும் அஞ்சலி இக்கதைச் சூழலுக்கென்றே அவதரித்த தேவதையாக உலா வருகிறார். இறுதியின் இறுதியில் எல்லா கதைகளையும் கேட்ட பிறகும், "உன்னோடு இனியும் வர இயலாது" என்கிற உண்மையை பறைசாற்றிவிட்டு அவள் கிளம்பும் இடம், தொடர் பிறவிகளையும் தொடர் தேடுதல்களையும் காலப் பிரகாரமாய் உணர்த்துகிறது படம்.
மனிதனைத் தவிர மற்ற அனைத்து ஜீவராசிகளும் தங்களின் அன்றாடப் பசிக்காக மட்டுமே இயற்கையைப் பயன்படுத்துகின்றன. ஆனால் மனித மனம், பாதுகாப்பற்ற உணர்வால் 'பேராசையை' வளர்த்துக்கொண்டது. வேடந்தாங்கலில் பறவைகளுக்காகப் பட்டாசு வெடிக்காத கிராம மக்களின் மரபு சார்ந்த அறிவு, நமக்கு உயிர்க்கருணையைத் தொகுத்து வழங்கியிருக்கிறது. ஆனால் இன்றைக்கு நாய்களின் வாலில் பட்டாசு கட்டுவதும், வெடிச் சத்தத்தால் மரங்களில் இருக்கும் நூற்றுக்கணக்கான வவ்வால்கள் அலறியடித்துப் பறப்பதைக் கண்டும் காணாமல் கடந்துசெல்வதும் மனிதன் தன் பச்சாதாபத்தை இழந்துவிட்டதன் அடையாளம் என்பதை திரையரங்கிலிருந்து விடைபெற்றபிறகும் படம் மனதுள் பல படங்களை ஓட விடுகிறது.
எல்லாக் காலத்திலும் மாறாமல் பெய்யும் மாமழையைக் கண்டு, “மாமழை போற்றுதும்! மாமழை போற்றுதும்!” என்று உருகி மருகும் குரூர மனத் தெளிவை இத்திரைப்படம் நமக்குத் தருகிறது. தமிழின் வேரையும் தமிழரின் குணத்தையும் தோண்டிப் பார்க்கும் ஒருவன், இன்றையப் பொழுதில் ‘பைத்தியம்’ என்றே முன்நிறுத்தப்படுவான். ஆனால், அந்தத் தமிழ் பித்தின் உயர்நிலையை அப்படியே உரித்து வைத்திருக்கிறார் ராம். டேவிட் மாமெட் போன்ற கோட்பாட்டாளர்கள் ‘காட்சிகளே சினிமா’ என்பார்கள். இயக்குநர் ராம் இத்திரைப்படத்தின் வழியே ஒரு பறவை இறகென மிதந்து, வசனங்களைக் குறைத்து, காட்சி வழியே அபாரமான அர்த்தங்களை விரியச் செய்திருக்கிறார்.
யுவன் ஷங்கர் ராஜாவின் பாடல்களும் பின்னணி இசையும், குழந்தையைத் தூளியிலிட்டு ஆட்டும் அம்மாவின் கைகளைப் போன்ற மென்மையைத் தருகின்றன. மதன் கார்க்கி மற்றும் மதி புகழேந்தியின் பாடல் வரிகள் அன்பின் புனிதத்தில் முங்கிக் குளித்திருக்கின்றன.
எல்லோரும் தெளிவற்று குழம்பி நிற்கும் ஓர் இடத்திலிருந்து கருவைக் கண்டெடுத்து, மிகத் தெளிவான நிலைக்கு நம்மை அழைத்துச் செல்லும் இந்தத் திரைக்கதை அற்புதம், மனிதக் குரூரங்களை அடித்து நொறுக்கி, நம்மைச் சுற்றியுள்ள ஒவ்வொரு சிறு உயிரையும் நேசிக்க வைக்கும் ஒரு பேருன்னதமான காவியம்! ஏழு கடல் ஏழு மலைகளைத் தாண்டிச் சென்றாலும் இதுபோன்ற திரைப்படங்களைக் காண்பது அரிது!
மதிப்பெண் 55/100
கருத்துகள் (0)
ஏற்றுகிறது…
தொடர்புடைய கட்டுரைகள்

தி பாரடைஸ் விமர்சனம் | நாயக வன்முறையின் மீது கட்டமைக்கப்பட்ட மக்கள் புரட்சி
25 செப்டம்பர், 2026

