யார் இந்த வாமிகா?
இன்று சந்திரா...! ஆனால், 8ஆம் வகுப்பில் தொடங்கிய ஒரு சிறுமியின் தேடல் எப்படியெல்லாம் கரடு முரடனான பாதையில் பயணப்பட்டு வந்தது என்பது தெரியுமா?

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ள ‘டிசி’ திரைப்படம் வெளியானபோது, இயல்பாகவே அதிக கவனம் லோகேஷின் நடிப்பின் மீதுதான் குவிந்தது. ஆனால் படம் பார்த்து முடித்த பிறகு ரசிகர்கள் பேசத் தொடங்கிய மற்றொரு பெயர் வாமிகா கபி.
‘சந்திரா’ என்ற கதாபாத்திரத்தில் அவர் வெளிப்படுத்திய நடிப்பு, ‘டிசி’ படத்தின் உணர்வுப்பூர்வமான மையங்களில் ஒன்றாக மாறியிருக்கிறது. வன்முறை நிறைந்த உலகில் சிக்கித் தவிக்கும் தேவதாஸுக்கு, நம்பிக்கையின் வெளிச்சமாகச் சந்திரா உருவெடுக்கிறார். சமூகத்தின் விளிம்புக்குத் தள்ளப்பட்ட ஒரு பெண்ணின் வலி, அவளுக்குள் இருக்கும் வாழ வேண்டும் என்ற பிடிவாதம், அன்பை நம்பும் மனம் — இவை அனைத்தையும் மிகையான வசனங்களின்றி, பெரும்பாலும் கண்களின் வழியாகவே கடத்துகிறார் வாமிகா.
குறிப்பாக, சந்திரா கதாபாத்திரத்தின் சிக்கல்களை அவர் அணுகிய விதம் கவனிக்கத்தக்கது. பாலியல் தொழிலுக்குள் சுரண்டப்படும் பெண்ணாக மட்டும் அவளைச் சித்தரிக்காமல், தன்னுடைய வாழ்க்கையைத் தானே மீட்டெடுக்க விரும்பும் ஒரு மனிதராக அவர் உருவாக்கியிருக்கிறார். தேவதாஸின் வன்முறையான உலகத்துக்குள் சந்திரா கொண்டு வரும் மென்மை, படத்தின் இருண்ட மனநிலைக்குள் ஒரு சிறிய வெளிச்சமாகத் தெரிகிறது.
‘டிசி’ வெளியான பிறகு வாமிகா குறித்த தேடல் அதிகரித்திருப்பதில் ஆச்சரியமில்லை. ஆனால் அவரது கலைப் பயணத்தைப் பார்த்தால், இந்த கவனம் அவருக்கு ஒரே இரவில் கிடைத்ததல்ல என்பது புரியும். உண்மையில், தமிழ் சினிமா இப்போது கவனிக்கும் இந்த முகத்துக்குப் பின்னால் கிட்டத்தட்ட இரண்டு தசாப்தங்களாக நீளும் ஓர் இளம் பெண்ணின் கனவும் தேடலும் இருக்கின்றன.

அப்பா ஓர் எழுத்தாளர்
1993 செப்டம்பர் 29-ல் சண்டிகரில் பிறந்த வாமிகா கபி, கலைச் சூழலோடு வளர்ந்தவர். நடிப்பு அவருக்கு திடீரெனக் கிடைத்த தொழில் அல்ல. சிறுவயதிலேயே நடனம், நாடகம் என கலைகளின் மீது ஈடுபாடு கொண்டிருந்தார். அதற்குக் காரணமாக இருந்தவர் வாமிகாவின் தந்தை. அவர் ஓர் எழுத்தாளர். அவர்தான் இலக்கிய நிகழ்ச்சிகளுக்கும் நவீன நாடகங்களுக்கு வாமிகாவை அழைத்து சென்றவர்.
அவர் ஒரு சிறார் நடிகராக பாலிவுட்டில் அறிமுகமானது காலம் அவருக்கு வழங்கிய முதல் கலைப் பரிசு! இம்தியாஸ் அலியின் ‘ஜப் வீ மெட்’ திரைப்படத்தில் கரீனா கபூர், ஷாஹித் கபூர் நடித்த கதாபாத்திரங்களின் குடும்பத்தில் வரும் சிறுமியாக வாமிகா நடித்தார். அப்போது அவருக்கு சினிமா என்றால் என்ன என்பதே முழுமையாகத் தெரியாத வயது. படப்பிடிப்புத் தளத்தில் இம்தியாஸ் அலி நடிகர்களுக்கு காட்சிகளை விளக்குவதையும், ஷாஹித் கபூர், கரீனா கபூர் போன்ற முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பதையும் அருகிலிருந்து பார்த்த அந்த அனுபவம், பின்னாளில் நடிப்பைத் தனது வாழ்க்கையாகத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற எண்ணத்துக்கான விதையாக அமைந்தது.
அந்தப் படத்தில் நடித்தபோது, “ஒருநாள் நானும் கதாநாயகியாக முடியுமா?” என்ற எண்ணம் அவருக்குள் இருந்திருக்கிறது. ஆனால் தன்னுடன் நடித்த ஷாஹித் கபூர், கரீனா கபூர் ஆகியோர் ஏற்கெனவே திரையுலகக் குடும்பங்களிலிருந்து வந்தவர்கள் என்பதும் அவருக்குத் தெரியும். எனவே, அவர்களுடைய உலகத்துக்குள் தான் எப்படி நுழைவது என்ற தயக்கமும் இருந்தது.
ஆனால், விதி அவரை அங்கிருந்து வேறு பாதையில் அழைத்துச் சென்றது. ‘லவ் ஆஜ் கல்’, ‘மௌசம்’ போன்ற இந்திப் படங்களில் சிறிய கதாபாத்திரங்கள் கிடைத்தன. ஆனால் கதாநாயகியாக வருவதற்கான பாதை அவ்வளவு எளிதாக அமையவில்லை. அப்போது அவரது மனதில் தோன்றிய ஒரு எண்ணம்:
“நான் சினிமாவுக்காக உருவாக்கப்பட்டவள் அல்லவோ?”
2019ஆம் ஆண்டு வரையிலும் சினிமாவில் தனக்கென்று ஓர் இடத்தைத் தேடிக்கொண்டிருந்த வாமிகா, ஒரு கட்டத்தில் “நான் சினிமாவுக்காக உருவாக்கப்பட்டவள் அல்லவோ?” என்ற சந்தேகத்துக்கே சென்றுவிட்டதாக அவரே கூறியிருக்கிறார்.
அந்த காலகட்டத்தில் விஷால் பரத்வாஜின் ஒரு ஆஃப் பீர் இந்திப் படத்துக்கான ஆடிஷனில் பங்கேற்றார். அந்தப் படம் பின்னர் கைவிடப்பட்டாலும், அந்தப் படத்துக்கான நடிப்பு பயிற்சியாளர் அதுல் மோங்கியாவின் மூன்று நாள் நடிப்பு பயிற்சிப் பட்டறையில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. அந்தப் பட்டறைதான் வாமிகாவின் நடிப்பு பற்றிய பார்வையையே புரட்டிப்போட்டது. நடிக்காமல் இருப்பதுதான் நடிப்பு என்பதை அங்கே புரிந்துகொண்டார்.

நடிப்பு என்பது தன்னிடமிருந்து வேறொரு மனிதராக மாறுவது மட்டுமல்ல; முதலில் தன்னைப் புரிந்துகொள்வதும், தன்னிடம் இருக்கும் உணர்வுகளை ஏற்றுக்கொள்வதும், பிறரைப் புரிந்துகொள்ளும் திறனை வளர்த்துக்கொள்வதும்தான் உண்மையான நடிப்புக்கான அடிப்படை என்பதை அப்போது புரிந்துகொண்டதாக அவர் கூறியிருக்கிறார். அந்தப் புரிதல் அவரது பிற்கால நடிப்பில் ‘#டிசி’ என்கிற தமிழ் படத்தில் சந்திராவாக அவர் காட்டியிருக்கும் பரிமாணம் வரையில் அவருக்குத் மாற்றத்தையும் திரும்புமுனையையும் தந்துவிட்டது.
பஞ்சாப் - கேரளம் மண்ணில்..
2013-ல் வெளியான ‘Sixteen’ திரைப்படம் வாமிகாவை கதாநாயகியாக அறிமுகப்படுத்தியது. அதன்பிறகு அவர் பஞ்சாபி திரையுலகில் அதிக கவனம் செலுத்தத் தொடங்கினார். ‘Tu Mera 22 Main Tera 22’, ‘Ishq Brandy’, ‘Nikka Zaildar 2’, ‘Nikka Zaildar 3’, ‘Parahuna’, ‘Rabb Da Radio 2’ உள்ளிட்ட பல பஞ்சாபி படங்களில் நடித்தார். இந்தப் படங்கள் அவருக்கு அந்த மொழித் திரையுலகில் தனியான அடையாளத்தை உருவாக்கித் தந்தன. ஆனால் வாமிகா தன்னை ஒரு பஞ்சாபி நடிகையாக மட்டுமே எல்லையைக் குறுக்கிக்கொள்ள விரும்பவில்லை.
ஒரு மொழியில் கிடைத்த வெற்றியை அடுத்த மொழிக்கான படிக்கட்டாக மாற்றிக்கொண்டார். அதுதான் அவரை மலையாளத்துக்கு அழைத்துச் சென்றது.
அடுத்து 2017-ல் டோவினோ தாமஸுடன் நடித்த ‘கோதா’ திரைப்படம் வாமிகாவின் வாழ்க்கையில் முக்கியமான திருப்புமுனை. பஞ்சாபைச் சேர்ந்த மல்யுத்த வீராங்கனையான அதிதி சிங் கதாபாத்திரத்தை அவர் ஏற்றார். அந்தக் கதாபாத்திரத்துக்காக வெறும் நடிப்பு மட்டும் போதவில்லை. வாமிகா உடல்ரீதியாகவும் தயாராக வேண்டியிருந்தது.
எந்த சமரசமும் இல்லாமல் உண்மையான மல்யுத்தப் பயிற்சி எடுத்தார். பஞ்சாபில் ஆரம்பப் பயிற்சிக்குப் பிறகு கேரளாவிலும் மல்யுத்த நுணுக்கங்களைப் பயின்றார். படப்பிடிப்பின் போது ஏற்பட்ட காயங்களையும் பொருட்படுத்தாமல் ஆக்ஷன் காட்சிகளில் ஈடுபட்டார். ஒரு பேட்டியில், அந்தப் பயிற்சி காலத்தில் கைகள், தொடைகள், கால்களில் பல காயங்கள் ஏற்பட்டதாகவும், ஆனால் அந்த அனுபவம் என் உடலுக்கும் மனதுக்கும் வலிமையைச் சேர்த்தது என்றும் அவர் கூறியுள்ளார். ‘கோதா’வின் வெற்றி, வாமிகாவை தென்னிந்திய ரசிகர்களிடம் கொண்டு சென்றது.
அதற்கு முன்பே தமிழில் செல்வராகவன் திரைக்கதை எழுதிய ‘மாலை நேரத்து மயக்கம்’ திரைப்படத்தின் மூலம் அவர் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமாகியிருந்தார். ஆனால் ‘கோதா’ அவருக்கு ஒரு வேறு வகையான அடையாளத்தை உருவாக்கியது.

மொழிகள் மாறின.. நடிப்பும் மாறியது..
வாமிகாவின் திரைப்பயணத்தை சுவாரஸ்யமாக்கும் விஷயம் அவரது மொழிப் பயணம். பஞ்சாபி, இந்தி, மலையாளம், தமிழ், தெலுங்கு என வெவ்வேறு மொழிகளில் நடித்திருக்கிறார். ஒவ்வொரு மொழியிலும் அவருக்குக் கிடைத்த கதாபாத்திரங்கள் ஒன்றுக்கொன்று மாறுபட்டவை. அவர் ஒரு குறிப்பிட்ட கமர்ஷியல் ‘ஹீரோயின் இமேஜை’ உருவாக்கிக்கொண்டு ‘டெம்பிளேட் சினிமா சதையாக’ அவர் நடிக்கவில்லை.
அதனால்தான் ஒரு படத்தில் மல்யுத்த வீராங்கனையாகவும், இன்னொரு படத்தில் காதல் கதாநாயகியாகவும், மற்றொரு படத்தில் வரலாற்றுப் பின்னணி கொண்ட பெண்ணாகவும், இன்னொரு படத்தில் இருண்ட உலகில் வாழும் பெண்ணாகவும் தோன்ற முடிந்திருக்கிறது.
வாமிகாவின் நடிப்புப் பயணத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது சினிமா மட்டும் அல்ல; OTT உலகமும் தான்.
2021-ல் வெளியான ‘கிரஹன்’ தொடரில் மனு என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். அதன்பிறகு ‘83’ உள்ளிட்ட படைப்புகளில் தோன்றினார்.ஆனால் அவரது பெயரை இந்திய அளவில் தீவிரமாக பேச வைத்தது விக்ரமாதித்ய மோத்வானே இயக்கிய ‘ஜூபிளி’. 1950-களின் இந்தித் திரையுலகை பின்னணியாகக் கொண்ட அந்தத் தொடரில், நிலோஃபர் குரேஷி என்ற கதாபாத்திரத்தை அவர் ஏற்றார். ஒரு சாதாரணப் பெண்ணாகத் தொடங்கி, சினிமாவில் பெரிய கனவுகளுடன் முன்னேற முயலும் நிலோஃபர், ஒரே நேரத்தில் ஆசை, வலி, கவர்ச்சி, நகைச்சுவை, தன்னம்பிக்கை, ஏமாற்றம் எனப் பல அடுக்குகளைக் கொண்டவர்.
அந்த கதாபாத்திரத்தை வாமிகா நடித்த விதம், அவரை வெறும் நடிகை என்ற இடத்திலிருந்து ‘நடிப்புத் திறனைக் காட்ட நல்ல கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து செய்கிற நடிகை’ என்ற இடத்துக்குக் கொண்டு சென்றது.சுவாரஸ்யம் என்னவென்றால், அந்தக் கதாபாத்திரம் அவருக்கு முதலில் கிடைக்கவே இல்லை. ‘ஜூபிளி’க்காக வாமிகா ஆடிஷன் கொடுத்தார். ஆடிஷன் நன்றாக இருந்தாலும், விக்ரமாதித்ய மோத்வானே முதலில் அவரைத் தேர்வு செய்யவில்லை. அதற்குப் பிறகு கொரோனா பெருந்தோற்றுக் காலம் தொடங்கியது.

அந்த இடைவேளையில் வாமிகா சமூக வலைத்தளங்களில் பல விதமான நகைச்சுவை வீடியோக்களை வெளியிடத் தொடங்கினார். அதைப் பார்த்த மோத்வானே, தான் முதலில் நினைத்திருந்த நிலோஃபர் கதாபாத்திரத்தில் இல்லாத ஒரு விஷயத்தை வாமிகாவின் குறுங்காணொளிகளில் பார்த்தார். அவை குறும்புத்தனம், நகைச்சுவை உணர்வு, கட்டுப்பாடற்ற சுதந்திரம். வாமிகாவின் இந்த அசல் குணங்களையே நிலொஃபர் கதாபாத்திரத்திலும் சேர்த்துவிடுவது சரியாக இருக்கும் என்று முடிவெடுத்தார். அதன்பின்னரே அவர் வாமிகாவை மீண்டும் அணுகினார். இந்த முறை நிலோஃபராகவே மாறினார் வாமிகா.
ஒரு வகையில் பார்த்தால், ஒரு நடிகையை நிராகரித்த அதே இயக்குநருக்கு, அந்த நடிகையின் ‘நடிகையல்லாத’ தருணங்கள்தான் அவரை மீண்டும் நடிகையாகத் தேர்வு செய்ய வைத்திருக்கின்றன. சினிமா சில நேரங்களில் இப்படித்தான் ‘பைத்தியக்காரத்தனமாக’ செயல்படுகிறது.
இம்தியாஸ் அலியின் ‘சின்னப் பெண்’
‘ஜூபிளி’யைப் பார்த்த இம்தியாஸ் அலி, வாமிகாவை பாராட்டியிருக்கிறார். காரணம் அவருக்கு வாமிகா அறிமுகமான பெண். எட்டாம் வகுப்பில் ‘ஜப் வீ மெட்’ படப்பிடிப்பில் இருந்த சிறுமி, பல ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு சிக்கலான பெண்ணாக திரையில் நிற்பதை அவர் பார்த்திருந்தார். இன்றும் இம்தியாஸ் அலி அவரை ‘சோட்டி வாலி’ (சின்ன சுட்டி ஆனால் திறமையானவள்) என்று அழைப்பதாக வாமிகா குறுநகையுடன் கூறுகிறார். ஒரு நடிகையின் மன வளர்ச்சி, நடிப்புத் திறன் வளர்ச்சியை அளக்க இதைவிட அழகான அளவுகோல் இருக்க முடியுமா? ஒரு இயக்குநரின் படத்தில் சிறுமியாகத் தோன்றியவர், பல ஆண்டுகளுக்குப் பிறகு அதே இயக்குநரிடமிருந்து ஒரு பெரிய நடிகையாகப் பாராட்டு பெறுவது.
‘குஃபியா’, ‘மாடர்ன் லவ்’, ‘மாய்’...
‘ஜூபிளி’க்குப் பிறகு வாமிகாவுக்கு கிடைத்த கதாபாத்திரங்களின் பரப்பும் உலகமும் மேலும் விரிந்தது. விஷால் பரத்வாஜின் ‘குஃபியா’ திரைப்படத்தில் தபு, அலி ஃபசல் உள்ளிட்டோருடன் நடித்தார். ‘மாய்’ தொடரிலும் வித்தியாசமான பாத்திரத்தை ஏற்றார். தமிழில் அமேசான் பிரைமின் ‘மாடர்ன் லவ் சென்னை’ தொடரில் தியாகராஜன் குமாரராஜா இயக்கிய ‘நினைவோ ஒரு பறவை’ பகுதியில் நடித்தார்.
அதோடு, விஷால் பரத்வாஜின் ‘Charlie Chopra & The Mystery of Solang Valley’ போன்ற படைப்புகளிலும் தோன்றினார். அவரது தேர்வுகளில் பொதுவாகக் காணப்படும் ஒரு விஷயம், கதாபாத்திரம் எவ்வளவு பெரியது என்பதைவிட, அது எவ்வளவு வித்தியாசமானது என்பதற்கு அவர் கொடுக்கும் முக்கியத்துவம்.
வாமிகாவின் பயணத்தில் வெற்றிகளின் பட்டியலை மட்டும் பார்த்தான் அதன் உண்மையான சுவாரஸ்யம் நமக்குத் தெரியாது. ஏனென்றால் அவரது வாழ்க்கையில் நிராகரிப்புகள் நிறைய. ஒரு கட்டத்தில், சில இயக்குநர்கள் வாமிகாவை சமூக வலைத்தளப் பக்கங்களில் பின்தொடர்பவர்கள் இல்லை என்பதற்காகவே நிராகரித்ததாகவும் அவரே கூறியிருக்கிறார். என்னவொரு கொடுமை; ஒரு நடிகைக்கு இதெல்லாம் ஒரு தகுதியா என்றுதானே கேட்கிறீர்களா? சினிமாவில் நீண்ட காலம் இருந்தும் கதாநாயகியாக கிடைக்கும் வாய்ப்புகள் குறைவாக இருந்ததால், ஒரு கட்டத்தில் “இது எனக்கான பாதைதானா?” என்று யோசித்தவர். ஆனால் அந்தத் தயக்கத்திலிருந்து மீண்டு வந்தபோது, அவர் தன்னை மாற்றிக்கொண்டார்.
அதனால்தான் இன்று அவரது நடிப்பில் முதிர்ச்சி தெரிகிறது. அவர் கதாபாத்திரத்தை ‘நடிக்க’ முயல்வதில்லை. அந்தக் கதாபாத்திரத்தின் மனநிலைக்குள் நுழைய முயல்கிறார்.
நடனம் அவருக்கு புதிதல்ல
வாமிகாவின் நடிப்பில் நடனம் முக்கிய பங்கு வகிக்கிறது. அவர் கதக் பயிற்சி பெற்றவர்; பாரம்பரிய இசையிலும் பயிற்சி பெற்றிருக்கிறார். அதனால் அவரது உடல் மொழியில் ஒரு இயல்பான இசைத் தன்மை இருப்பதைக் கவனிக்க முடியும். ‘ஜூபிளி’ போன்ற காலகட்டப் பின்னணியில் அமைந்த கதையில் இது அவருக்கு கூடுதல் பலமாக அமைந்தது. 1940, 1950-களின் இந்திப் பாடல்கள், அக்கால நடிகைகளின் உடல்மொழி ஆகியவற்றை ஆராய்ந்து நிலோஃபரை தன் நடிப்பில் வெளிப்படுத்தியதாக அவரே ஒரு பேட்டியில் அவர் கூறியிருக்கிறார்.
அதாவது, கதாபாத்திரத்துக்கு ஏற்ற உடை அணிவது மட்டுமல்ல; அந்தக் காலத்துப் பெண் எப்படி நடந்திருப்பாள், எப்படி சிரித்திருப்பாள், எப்படி பார்வையைத் திருப்பியிருப்பாள், எப்படி நடன அசைவுகளைத் தன் உடல்மொழியில் கொண்டு வந்திருப்பாள் என்பதையெல்லாம் அவர் கவனித்து அவற்றை உள்வாங்கிக்கொண்டார். அதுவே அவருடைய நடிப்பை மேலோட்டமான வெறும் ‘காஸ்டுயூம் ஃபெர்ஃபார்மென்ஸ்’ ஆக மாறாமல் காப்பாற்றியது.

இப்போது ‘சந்திரா’
இத்தனைக் கதாபாத்திரங்களையும் கடந்து வந்த வாமிகா, இப்போது ‘டிசி’ படத்தில் சந்திராவாக தமிழ் ரசிகர்களுக்கு முன்னால் நிற்கிறார். தேவதாஸ் என்ற வன்முறை நிறைந்த மனிதனின் வாழ்க்கைக்குள் நுழையும் சந்திரா, அவனது கடந்த காலத்தை மாற்ற முடியாது. ஆனால் அவனுடைய எதிர்காலம் வேறு விதமாக இருக்கலாம் என்ற நம்பிக்கையை உருவாக்குகிறாள்.
அதனால் சந்திரா வெறும் காதல் கதாபாத்திரம் அல்ல. அவள் ஒரு மீட்பின் சாத்தியம். சமூகத்தால் கைவிடப்பட்ட ஒரு பெண், சமூகத்தால் வன்முறையாளனாக உருவாக்கப்பட்ட ஒரு ஆணுக்கே மனிதத்தன்மையை மீண்டும் நினைவூட்டுகிறாள். இந்த முரணை #டிசியில் காட்டிய தன் உடல்மொழியில் வாமிகா மிக நுட்பமாகச் சுமந்திருக்கிறார்.
அவருடைய நடிப்பின் மிகப்பெரிய பலம் வசனங்களில் இல்லை. சில காட்சிகளில் அவர் பேசாமல் நிற்கும்போது கூட, அந்தப் பாத்திரத்தின் கடந்த காலம் முழுவதும் முகத்தில் தெரிகிறது.
‘டிசி’யில் லோகேஷ் கனகராஜின் தேவதாஸ் கதாபாத்திரம் வன்முறையின் வழியாக நகரும்போது, வாமிகாவின் சந்திரா மனிதநேயத்தின் வழியாக அந்தக் கதையை வேறு திசைக்குத் திருப்புகிறார். இந்தக் கதாபாத்திரமே படத்தின் உணர்வுப்பூர்வமான அடித்தளங்களில் ஒன்றாக அமைந்திருக்கிறது.
இன்னும் முடியவில்லை...
வாமிகா கபியின் தமிழ் சினிமாவுக்கான கலைப் பயணம் ‘#டிசி’யுடன் முடிந்துவிடவில்லை.
2026-ல் அவர் நடித்த ‘Pati Patni Aur Woh Do’, ‘Bhooth Bangla’ ஆகிய இந்திப் படங்கள் வெளியாகியுள்ளன. ‘Prahaar: The Untold Story of Ujjwal Nikam’ உள்ளிட்ட படைப்புகளிலும் அவர் தொடர்ந்து வருகிறார். ‘G2’, ‘Dil Ka Darwaaza Khol Na Darling’, ‘Kuku Ki Kundli’ உள்ளிட்ட பல படங்கள் அவரது நடிப்பில் வெளிவர இருக்கின்றன. வாமிகா எட்டாம் வகுப்பு படித்தபோது ‘ஜப் வீ மெட்’ படப்பிடிப்புத் தளத்தில் நின்ற ஒரு சிறுமி. இன்று இந்தியாவின் பல மொழிகளில் தொடர்ந்து நடித்துக்கொண்டிருக்கும் ஓர் திறமையா திரைக் கலைஞர் ஆக மாறியிருக்கிறார்.
அவரது பயணத்தை ஒரு நேர்கோட்டில் எழுத முடியாது.
இந்தி → பஞ்சாபி → மலையாளம் → தமிழ் → தெலுங்கு → OTT என்று அவர் படிப்படியாக நடந்து வந்த கரடு முரடான பாதை, திரையில் தான் யாராக இருக்க வேண்டும் என்கிற கனவின் மீது உருவானது. வாமிகா கபியைப் பற்றி இன்று பேசும்போது, ‘டிசி’யின் சந்திராவை மட்டும் பேசுவது போதாது. அந்த சந்திராவின் கண்களில் தெரியும் வலிக்குப் பின்னால்,எட்டாம் வகுப்பில் கேமராவுக்கு முன் நின்ற ஒரு சிறுமி இருக்கிறாள்.
அந்தச் சிறுமியின் கனவுக்குப் பின்னால், பல சிறிய வேடங்கள் இருக்கின்றன. அவற்றுக்குப் பின்னால், பல ஆண்டுகளின் நிராகரிப்புகள் இருக்கின்றன. அந்த நிராகரிப்புகளுக்குப் பின்னால், தன்னை மீண்டும் மீண்டும் கண்டுபிடித்த ஓர் அசலான இருக்கிறார்.
அதனால்தான் இன்று சந்திராவாக வாமிகா கபி திரையில் தோன்றும்போது, நாம் பார்ப்பது இன்னொரு நடிகையின் வெற்றியை என நினைத்துவிடுகிறோம். ஆனால், தனக்கான இடத்தைத் தேடி நீண்ட காலம் ஓடி வந்துகொண்டிருந்த ஒரு வட இந்தியப் பெண், இறுதியில் அந்த இடத்தையே தனது நடிப்பால் உருவாக்கிக்கொண்டிருக்கும் தமிழ்த் திரைப்படத் தருணம் அது.

எழுத்தாளர் குறிப்பு
ராக் ஸ்டார்சிறப்புக் கட்டுரையாளர்
ஊடகத் துறையில் 20 ஆண்டுகள் அனுபவம். பெண்ணரசியல், பெண் மொழி, தொழில்முனைவு இதழியல் ஆகியவற்றில் தேர்ந்த அறிவும் அனுபவமும் கொண்டவர். விரைந்து கட்டுரைகளை வழங்கும் ஆற்றல் கொண்டவர்.
@https://x.com/Newsfeltகருத்துகள் (0)
ஏற்றுகிறது…
