/
NFNEWSFELT
இந்தியா

எஃப்.பி.ஐ-ன் ‘டாப் 10’  குற்றவாளிகள் பட்டியலில் கோல்டி பிரார் | சர்வதேச அளவில் பிடிவாரண்ட்!

பஞ்சாப் மாநிலம் ஸ்ரீ முக்த்சர் சாகிப் பகுதியைச் சேர்ந்த கோல்டி பிரார், 2017-ல் மாணவர் விசா மூலம் கனடா சென்றார்.

Newsfelt Admin29 செப்டம்பர், 20263 நிமிட வாசிப்பு
பகிர்:

அமெரிக்க புலனாய்வு அமைப்பான எஃப்.பி.ஐ (FBI), பல்வேறு எல்லை தாண்டிய குற்றங்களில் தொடர்புடைய சர்வதேச நிழலுலக குற்றவாளியான சதிந்தர்ஜீத் சிங் என்ற கோல்டி பிராரை (Satinderjeet Singh alias Goldy Brar) தனது ‘10 மோஸ்ட் வான்டட்’ குற்றவாளிகள் பட்டியலில் அதிகாரப்பூர்வமாகச் சேர்த்துள்ளது. இவரைப் பற்றிய துல்லியமான தகவல் கொடுப்போருக்கு 10 லட்சம் அமெரிக்க டாலர்கள் (சுமார் 8.3 கோடி ரூபாய்) சன்மானம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கோல்டி பிராரின் பின்னணி

இந்தியாவின் பஞ்சாப் மாநிலம் ஸ்ரீ முக்த்சர் சாகிப் பகுதியைச் சேர்ந்த கோல்டி பிரார், 2017-ல் மாணவர் விசா மூலம் கனடா சென்றார். அங்கிருந்தபடியே நிழலுலக வழிகளில் தடம்பதித்து, லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டமைப்பின் வட அமெரிக்கப் பிரிவை முன்னின்று வழிநடத்தத் தொடங்கினார். 2022 மே மாதம் பஞ்சாபின் பிரபல பாடகரும் அரசியல்வாதியுமான சித்து மூஸ்வாலா சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்குப் பின்னால் கோல்டி பிரார் செயல்பட்டது வெளிச்சத்திற்கு வந்தது. இக்கொலைக்குத் தானே பொறுப்பேற்பதாக சமூக வலைத்தளங்களில் பகிரங்கமாக அறிவித்தார். கொலை, கப்பம் கோருதல், எல்லை தாண்டிய ஆயுதக் கடத்தல் மற்றும் 'பாபர் கல்சா இன்டர்நேஷனல்' அமைப்புடனான தொடர்பு காரணமாக, இந்திய உள்துறை அமைச்சகம் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் (UAPA) கீழ் இவரைப் பயங்கரவாதியாக அறிவித்தது.

FBI எடுத்த அதிரடி நடவடிக்கை

அமெரிக்க எல்லைக்குள் சட்டவிரோத நெட்வொர்க்குகளைக் கட்டுப்படுத்த மேற்கொள்ளப்பட்ட ‘ஆப்பரேஷன் ஹார்ட்பால்’ (Operation Hardball) விசாரணையின் தொடர்ச்சியாக, எஃப்.பி.ஐ இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. சதித்திட்டம் தீட்டுதல் (RICO Conspiracy), தொடர் இலக்கு படுகொலைகள் (Targeted Killings), வணிக நிறுவனங்களை மிரட்டிப் பணம் பறித்தல், போதைப்பொருள் மற்றும் ஆயுதக் கடத்தல் ஆகியவை எஃப்.பி.ஐ பதிந்துள்ள முதன்மை வழக்குகளாகும். 2023-ல் கனடாவில் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்ட சம்பவத்திலும் கோல்டி பிரார் மற்றும் பிஷ்னோய் கூட்டத்திற்குத் தொடர்பிருப்பதாக எஃப்.பி.ஐ குற்றப்பத்திரிகையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.  இதுவரை கனடாவில் பதுங்கியிருப்பதாகக் கருதப்பட்ட கோல்டி பிரார், அமெரிக்காவின் கலிபோர்னியா உள்ளிட்ட பகுதிகளிலும் தங்கி குற்ற நடவடிக்கைகளை இயக்கி வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

 நிழலுலக நெட்வொர்க்

இந்திய அமைப்புகளான என்.ஐ.ஏ (NIA), இன்டர்போல் (Interpol) மற்றும் கனடாவின் 'போலோ' (BOLO) திட்டம் ஆகியவற்றின் தேடப்படும் பட்டியலில் ஏற்கெனவே இடம்பெற்றிருந்த பிரார், தற்போது அமெரிக்க எஃப்.பி.ஐ-ன் 'டாப் 10' பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதன் மூலம் சர்வதேச அளவில் வலைவிரிக்கப்பட்டுள்ள குற்றப்பின்னனியாளராக அடையாளம் காணப்பட்டுள்ளார். அமெரிக்கா, கனடா மற்றும் இந்திய உளவு அமைப்புகள் இணைந்து செயல்படுவதால், கோல்டி பிரார் மற்றும் அவரது சர்வதேசக் குற்ற வலைப்பின்னல் விரைவில் முடக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பகிர்:

கருத்துகள் (0)

கருத்திட உள்நுழையுங்கள்.

ஏற்றுகிறது…

தொடர்புடைய கட்டுரைகள்