லெனின் பாண்டியன் விமர்சனம் : காவல் துறையின் கன்னத்தில் முரட்டு அடி!
டி.டி. பாலச்சந்திரனை தரமான அறிமுக இயக்குநராக வரவேற்கலாம். துரைராசு கதாபாத்திரத்தில் கங்கை அமரன் முழுப் படத்தையும் தனது தோள்களில் சுமந்து செல்கிறார்.

மணமாதுரை அருகிலுள்ள ஒரு விவசாய கிராமத்தில் மண் வாசனையோடு தொடங்குகிறது படம். மனைவியுடன் எளிமையான வாழ்க்கை நடத்தும் விவசாயி துரைராசுவின் அன்றாட உலகம், அவன் அன்புடன் வளர்க்கும் ஒரு வெள்ளாடு. அது மணல் கடத்தல்காரனின் லாரி மோதுவதால் உயிரிழக்கிறது. இந்தச் சிறிய சம்பவமே கதையின் மையத்தில் பெரும் சலனத்தை உருவாக்குகிறது. கோபத்தில் போலீஸ் நிலையத்திற்குச் சென்று புகார் அளிக்க முயலும் துரைராசு, அங்கே போலீஸ் இன்ஸ்பெக்டரால் கடுமையாக தாக்கப்படுகிறார். இந்த அநீதியை நீதிமன்றம் கவனத்தில் எடுத்ததும், ஒரு ஆடு வாகன விபத்தில் சிக்கிய நிகழ்வு, மணல் கடத்தல் மாஃபியாவை எதிர்த்து உருவாகும் பெரிய குற்றவியல் வழக்காக மாறி, சிபிசிஐடி விசாரணைக்குப் போகிறது.
இந்தச் சம்பவத்திற்குப் பிறகு துரைராசுவின் உயிருக்கு ஆபத்து உருவாக, நீதிமன்றம் அவருக்குப் பாதுகாப்பாக ரைபிள் துப்பாக்கி ஏந்திய காவலரை நியமிக்கிறது. இதுவரை துரைராசுவை மட்டுமே இலக்காக வைத்திருந்த மணல் மாஃபியா, இப்போது அந்த காவலரையும் அழிக்க திட்டமிடுகிறது. இந்தத் திருப்பங்களின் பின்னணியில் பதற்றம் மெதுவாக அதிகரித்து, இறுதியில் துரைராசு எதிர்பார்த்த நீதி கிடைக்கிறதா என்ற கேள்வியுடன் படம் கிளைமாக்ஸை நோக்கி நகர்கிறது.
டி.டி. பாலச்சந்திரனை ஒரு தரமான படைப்பைத் தர விரும்பும் அறிமுக இயக்குநராக இருகரம் நீட்டி வரவேற்கலாம். துரைராசு கதாபாத்திரத்தில் கங்கை அமரன் முழுப் படத்தையும் தனது தோள்களில் சுமந்து செல்கிறார். நிலத்தை விற்க வருபவரை தைரியமாக நிராகரிக்கும் உறுதி, ஆட்டின் மீது கொண்ட பாசம், காயமடைந்த ஆட்டைக் கண்டு உருகும் மனம், போலீஸ் கொடுமையில் துடிக்கும் வேதனை, தன்னைக் காக்க நியமிக்கப்பட்ட காவலரை மகனாக அணுகும் அன்பு, மனைவியுடன் வயதுக்கேற்ற பாசம், நீதிக்காக போராடும் துடிப்பு - இவை அனைத்தையும் அவர் நேர்த்தியாக வெளிப்படுத்துகிறார். அவருடைய மெலிந்த உடற்கட்டும், முகபாவனைகளும் அந்தக் கதாபாத்திரத்திற்கு ஏற்ற இயல்பை அளிக்கிறது. வேகமான வசன உச்சரிப்பும் அவரின் அர்ப்பணிப்பையும் உணர்த்துகிறது.
கதைக்கேற்ப துரைராசுவுக்கும் அவரது மனைவிக்கும் இடையே இருபது ஆண்டுகள் வயது வித்தியாசம் உள்ளது. அந்த வேடத்தில் ரோஜா, கிராமத்து பெண்ணாகச் சரியான மேக்கப்புடன் இயல்பாக பொருந்தி, முதிர்ச்சியான நடிப்பை அளிக்கிறார். சிவாஜி கணேசனின் பேரன், ராம்குமார் கணேஷனின் மகன் தர்ஷனுக்கு இது முதல் படம். முக்கியமான வேடத்தில் வரும் அவர், மேலதிகாரிகளிடம் அடிக்கடி சல்யூட் அடிக்கும் சோர்வு, பாதுகாப்பு பொறுப்பில் துப்பாக்கி கிடைக்கும் போது வரும் உற்சாகம், ஆயுதம் இருந்தும் செயலிழந்து நிற்கும் ஏமாற்றம், கட்டாய துரோகத்தின் நினைவில் உடையும் மனநிலை ஆகியவற்றை நன்றாக வெளிப்படுத்துகிறார்.
ஸ்ரீதா ராவ், தனது கணவரை சரியான பாதைக்கு வழிநடத்த முயலும் மனைவியாக நடித்துள்ளார். தர்ஷனுடன் அவருடைய இணைப்பு ஆழமாய் அமையாத போதிலும், உணர்ச்சி வெளிப்பாடுகளில் கவனம் ஈர்க்கிறார். நீதிபதியாக வரும் ஜார்ஜ் மரியான் தனது கம்பீரமான நடிப்பால் காட்சிகளை பலப்படுத்துகிறார். மணல் மாஃபியா தலைவராக ஆடுகளம் நரேன், உதவியாளராக யுகேந்திரன், கொடூரமான போலீஸ் அதிகாரியாக போஸ் வெங்கட், நேர்மையான வில்லேஜ் அட்மினிஸ்ட்ரேட்டிவ் ஆபிசராக பிக் பாஸ் அர்ச்சனா, சிபிசிஐடி அதிகாரியாக சுப்பு பஞ்சு ஆகியோர் தங்கள் பங்குகளைத் கச்சிதமாக நிறைவேற்றிவிடுகிறார்கள்.
இசைஞானி இளையராஜாவின் இசை படத்திற்கு ஒரு தனி உணர்வூட்டலை வழங்குகிறது. “பாண்டிமுனி சரணம் சரணம்”, “சர்க்காரே சொல்லிடுச்சு” போன்ற பாடல்கள் காட்சிகளுக்கு உயிரூட்ட, பின்னணி இசையும் தேவையான தாக்கத்தை அளிக்கிறது. குறிப்பாக “முதல் மரியாதை” பாடலின் சூழ்நிலைப் பயன்பாடு ரசிக்க வைக்கிறது. ஒளிப்பதிவாளர் ஏ.எம். எட்வின் சகாய், வளமும் வறட்சியும் இணைந்த கிராமப் பரப்பை அழகான கோணங்களில் பதிவு செய்து படத்தின் தரத்தை உயர்த்துகிறார்.
ஆனால் கதை சொல்லும் முறையில் உற்சாகம் தெரிகிறது. நிரபராதிகள் கொடூரர்களின் கையில் சிக்கும்போது என்ன நடக்கும் என்ற பழக்கப்பட்ட திரைக்கதை வடிவத்தையே படம் பின்பற்றுகிறது. சட்டம் குற்றவாளிகளை தண்டிக்க முடியாதபோது, கதாநாயகன் நம்பும் தெய்வமான ‘பாண்டிமுனி’ காப்பாற்றுவான் என்ற எதிர்பார்ப்பு எழுகின்றது. ஆனால் முடிவின் யதார்த்தம் என்னவாக இருந்தது என்பதை கசப்பான உண்மையுடன் முடிக்கும் இந்த நல்லப் படத்தை துணிந்து வரவேற்கலாம். குறிப்பாக, கொடுக்கப்படாத அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யும் காவல் துறையின் கன்னத்தில் ஓங்கி அரைந்திருப்பதற்காக..!
NEWS FELT மதிப்பெண் - 3.9/5
-1200x800.webp%3F2026-09-25T17%253A50%253A14.872Z&w=3840&q=75&dpl=dpl_6QAnpyANhNVSsYRBDTxg69w8vYjM)
.jpeg%3F2026-09-25T17%253A50%253A17.414Z&w=3840&q=75&dpl=dpl_6QAnpyANhNVSsYRBDTxg69w8vYjM)
-1200x800.webp%3F2026-09-25T17%253A50%253A22.699Z&w=3840&q=75&dpl=dpl_6QAnpyANhNVSsYRBDTxg69w8vYjM)
-1200x800.webp%3F2026-09-25T17%253A50%253A25.847Z&w=3840&q=75&dpl=dpl_6QAnpyANhNVSsYRBDTxg69w8vYjM)
கருத்துகள் (0)
ஏற்றுகிறது…



