‘சண்டைக்காரி’ விமர்சனம் | ஓர் அழகிய ராட்சசியின் கிராமத்து நாட்கள்!
"மகிழ்ச்சியாக வந்து, சிரித்துவிட்டுச் செல்லலாம்" என்ற பாணியில் உருவாகும் திரைப்படங்கள் அனைவருக்குமே பிடிக்கும்.

குடும்பத்துடன் காண்பதற்கு ஏற்ற வகையில் ஒரு ஆண்டில் ‘யூ’ சான்றிதழ் பெறும் படங்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். அந்த வரிசையில், தரமான நகைச்சுவை, இயல்ப்பான ஆக்ஷனுடன் திரைக்கு வந்திருக்கும் ஒரு அழகான ராட்சசி இந்த சண்டைக்காரி
‘தி ப்ரொபோசல்’ (The Proposal) எனும் ஹாலிவுட் திரைப்படத்தின் தழுவலாக மலையாளத்தில் வெளியாகி வெற்றிபெற்ற ‘மை பாஸ்’ திரைப்படத்தின் தமிழ் மறுஆக்கமாக இருந்தாலும் தமிழுக்கு ஏற்ப சின்னச் சின்ன மாற்றங்களை அழகாகக்ச் செய்திருக்கிறார் நீண்ட இடைவேளைக்குப் பிறகு இப்படத்தின் உரிமை பெற்று இயக்கித் தயாரித்துள்ள ராஜேஷ்.
கதையின் நாயகன் விமல் லண்டனிலுள்ள மென்பொருள் (Software) நிறுவனம் ஒன்றில் பணியாற்றுகிறார். அவருடைய உயரதிகாரியான ஸ்ரேயா, வேலையில் மிகவும் கண்டிப்பானவர்; யாராவது சிறிய தவறு செய்தாலும் கடுமையாக நடந்துகொள்ளும் குணமுடையவர். சுருக்கமாகச் சொன்னால், அனைவரையும் அச்சுறுத்தும் ஒரு அதிகாரி. அவருடைய இத்தகைய அணுகுமுறையால் விமலும் பாதிக்கப்படுகிறார். இச்சூழலில், ஸ்ரேயாவின் விசா நடைமுறையில் ஒரு சிக்கல் உருவாகிறது. அதிலிருந்து தப்பிப்பதற்காக, விமலின் மனைவியாக நடித்து, அவருடைய சொந்தக் கிராமத்திற்குச் சென்று சில நாட்கள் தங்கும் சூழல் ஸ்ரேயாவுக்கு ஏற்படுகிறது.
கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி ஸ்ரேயாவிடம் தன் ஆத்திரத்தைத் தீர்த்துக்கொள்ள விமல் திட்டமிடுகிறார். தொடக்கத்தில் விமலின் குடும்பத்தாரின் வெறுப்பைச் சம்பாதிக்கும் ஸ்ரேயா, நாளடைவில் அவர்களின் அன்பைப் பெற்று குடும்பத்தில் ஒருவராக மாறுகிறார். இந்த நிகழ்வுகள் அனைத்தும் சுவாரசியமாகப் படமாக்கப்பட்டுள்ளன. இறுதியில், இந்தப் போலித் தம்பதியினர் நிஜ வாழ்க்கையில் ஒன்றிணைந்தார்களா, இல்லையா என்பதை நிறைவுப் பகுதியின் விறுவிறுப்பான காட்சிகளோடு இயக்கியுள்ளார் இயக்குநர் ஆர். மாதேஷ்.
நகைச்சுவைக்குக் குறைவில்லாத கதைக்களங்களில் விமல் தனக்கே உரிய இயல்பான குறும்புத்தனமான நடிப்பால் கவர்கிறார். காட்சிக்குக் காட்சி அவருடைய நடிப்பு ரசிக்கும்படி அமைந்துள்ளது. உயர் பதவியின் கர்வத்தைக் காட்டுவது, கறாரான அணுகுமுறை, தன்னை நெருங்க முயலும் விமலிடம் காட்டும் அலட்சியம் என ஸ்ரேயாவின் பங்களிப்பு சிறப்பானதாக உள்ளது.
"நம்ம முகத்துக்கெல்லாம் ஆங்கிலம் சரியாக வராது சார், சிரித்துவிடுவார்கள்" எனத் தொடங்கும் நகைச்சுவை உரையாடல்கள் முதல், விமலுடன் இணைந்து சத்யன் செய்யும் சுட்டித்தனங்கள் வரை திரையரங்கில் சிரிப்பலைகளை ஏற்படுத்துகின்றன. சிறிய கதாபாத்திரத்தில் வரும் கிரேன் மனோகர் கூட, ஸ்ரேயா - விமல் ஜோடிப் பொருத்தத்தைக் குறிப்பிடும் வசனத்தின் மூலம் கவனிக்க வைக்கிறார். படத்தில் வரும் அனைத்துக் கதாபாத்திரங்களுக்கும் உரிய முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. கே.ஆர். விஜயா, 'இளைய திலகம்' பிரபு போன்ற மூத்த நடிகர்களின் நடிப்பும் படத்திற்குப் பலம் சேர்க்கிறது.
விமலும் ஸ்ரேயாவும் இணைந்து ஆடும் பாடல்களுக்குத் துள்ளலான இசையை வழங்கியுள்ள அம்ரீஷ், பின்னணி இசையிலும் நகைச்சுவை மற்றும் உணர்வுப்பூர்வமான காட்சிகளுக்கு ஏற்பப் சிறப்பான பங்களிப்பை நல்கியுள்ளார்.
அயல்நாட்டுக் காட்சிகளில் பிரமாண்டத்தையும், கிராமத்துக் காட்சிகளில் பசுமையையும் தன் கேமரா வழியே அழகாகக் காட்சிப்படுத்தி ஒளிப்பதிவாளர் குருதேவ் தன் கடமையைச் செவ்வனே செய்துள்ளார்.
"மகிழ்ச்சியாக வந்து, சிரித்துவிட்டுச் செல்லலாம்" என்ற பாணியில் உருவாகும் திரைப்படங்கள் அனைவருக்குமே பிடிக்கும். அந்த வரிசையில் இடம்பெறும் இந்தச் ‘சண்டக்காரி’ வயது வேறுபாடு இல்லாமல் எல்லாரையும் வசீகரம் செய்வாள் என்று கூற முடியும்
மதிப்பெண் 3.5 / 5

கருத்துகள் (0)
ஏற்றுகிறது…



