டிரோன்ஸ் விமர்சனம்: வால்ட் டிஸ்னியை சவாலுக்கு அழைக்கும் அட்டகாசக் குடும்பப் படம்!
டிஸ்னி படங்களைக் காணும்போதெல்லாம் ஏங்கியிருக்கிறேன். அந்த ஏக்கத்தைப் போக்கியிருக்கிறார் இந்தப் படத்தை எழுதி இயக்கியிருக்கும் ராகவ் மிர்தாத்.

வால்ட் டிஸ்னியின் கதைப் படங்கள், பண்பாடு மற்றும் மொழி, நில எல்லைகளைத் தாண்டி உலகளாவிய குடும்பங்களை ஒன்றிணைக்கும் விசித்திரமான மாயா ஜாலக் கதைக் களங்களுக்குப் பெயர் பெற்றவை. மனித குலத்தின் அடிப்படை உணர்வுகளான அன்பு, நம்பிக்கை, கனவுகள், மற்றும் நன்மையின் வெற்றி ஆகியவற்றை எளிய காட்சிகளாலும் ஆன்மாவைத் தொடும் இசையாலும் அவை சித்தரிக்கின்றன.
குறிப்பாகக் குழந்தைத்தனம் மாறாத கதாபாத்திரங்களின் மூலம் பெரியவர்களுக்குத் தங்களின் பொன்னான நினைவுகளையும், குழந்தைகளுக்கு வாழ்வின் உன்னத விழுமியங்களையும் ஒரே நேரத்தில் கடத்துபவை. சந்ததியைத் தாண்டிய இந்த உணர்வுப் பிணைப்பு, தலைமுறைகள் மாறினாலும் ஒரே குடும்பமாக அமர்ந்து மகிழ்ச்சியையும் நெகிழ்ச்சியையும் ஒன்றாகப் பகிர்ந்துகொள்ளும் திரை அனுபவத்தைச் சாத்தியமாக்குவதால், தைரியமாக இன்று வரை வால்ட் டிஸ்னியின் படங்களை குடும்பமாக உட்கார்ந்து பார்க்கிறோம். அப்படியொரு படத்தை தமிழில் சாத்தியப்படுத்தமாட்டார்களா என டிஸ்னி படங்களைக் காணும்போதெல்லாம் ஏங்கியிருக்கிறேன். அந்த ஏக்கத்தைப் போக்கியிருக்கிறார் இந்தப் படத்தை எழுதி இயக்கியிருக்கும் ராகவ் மிர்தாத். அவரது பெயரின் இரண்டாம் பாதியான ‘மிர்தாத்’ தமிழ்ச் சூழலில் ஓர் ஆச்சரியம் அதிசயம்!
அதேபோல் இதுபோன்ற எல்லாக் காலத்திலும் எல்லாத் தலைமுறைகளிலும் மெய் சிலிர்க்க வைக்கும் காமிக்ஸ் தன்மை கொண்ட கதாபாத்திரங்களை ரசித்து, இதை இவ்வளவு செலவழித்து படமாக்கலாம் என்று தரமான கதையிலும் திறமைகள் மீதும் நம்பிக்கை வைத்து முதலீடு செய்திருக்கும் ஜி.எம்.மோர்கன் பிலிம்ஸ் (GM Morgan Films) நிறுவனத்தின் தயாரிப்பாளர்களை உளமாறப் பாராட்டலாம். இனி சுருக்கமான விமர்சனத்துக்குள் நுழைவோம்..
தமிழ் சினிமாவில் ஹாரர் படங்கல் என்றால் பேய் பங்களாவில் சிக்கிக்கொள்ளும் கதாபாத்திரங்களைக் காட்டி போரடிப்பார்கள். ஆனால், இங்கே இரண்டு வீடுகள் படத்தில் வருகின்றன. இரண்டுமே எதிரெதிர் துருவங்கள். ஒன்று பழமையான ஒரு வீடு. ஆனால், அது பேய் பங்களா தோற்றத்தில் இல்லை. மற்றொன்று ஒரு நவீன வீடு. அதுவொரு இளம் விஞ்ஞானியின் அறிவியல் ஆய்வுக் கூடமும் கூட. ‘பிளாக் ஹோல்’ என்கிற அந்த ஆய்வுக் கூட வீட்டுக்குள் முதன்மைக் கதாபாத்திரங்களில் மூன்று ஓவியக் கல்லூரி மாணவர்கள் சிக்கிக் கொள்கிறார்கள். அந்த வீட்டுக்குள் 7 நாள்கள் இருந்தே ஆக வேண்டிய கட்டாயம். அவர்களுக்கு அங்கே உணவுக்கு உதவ ஒரு ‘ட்ரோன்’ இருக்கிறது. அந்த ட்ரோன் இன்னொரு உலகத்துக்கான உலகத்தை திறப்பாக மாறுகிறது. அந்த உலகத்துக்குள் சிக்கும் நம் ப்ரியத்துக்குரிய கதாபாத்திரங்கள் சந்திக்கும் மனிதர்களும் அவர்களால் ஓவியக் கல்லூரி மாணவர்களுக்கு கிடைக்கும் பாடமும் தான் படம்.
தூக்கத்தில் நடக்கிற வியாதி கேள்விப்பட்டிருக்கிறோம். இந்த கதையின் நாயகனுக்கு தூக்கத்தில் ஓடுகிற, ஆடுகிற வியாதி. அப்படி ஓடி ஆடுகிறவர் ஒரு அழகிய பெண்ணைப் பார்த்து, பளீர் நிறத்தில், அழகில் மயங்கிக் கிறங்கி காதலில் விழுகிறார். அவளும் காதலிக்கிறாள். ஆனால், அவளை திருமணம் செய்து கொண்டு வாழ்வது சாத்தியமில்லை என்றாகி விடுகிறது. அத்தோடு நிற்காமல் ஒரு சூனியக்காரியின் பிடியிலும் சிக்குகிறார். அப்படியொரு கேரக்டரை ஏற்றிருக்கிற ‘பரிதாபங்கள்’ டிராவிட் செல்வம் காதலால் உருவாகும் குதூகலத்தை, சூனியக்காரியிடம் மாட்டிக் கொண்டு படும் பாட்டை, தனது நீண்ட கால தோழியின் உணர்வைப் புரிந்து வருந்துவதில் குறையில்லாத நடிப்பில் வெளிப்படுத்தியிருக்கிறார்.
புஸுபுஸு கன்னங்களும் கன்னத்தில் விழும் குழியுமாக சித்தி இத்னானி அத்தனை அழகு. அவரும் டிராவிட் செல்வமும் அறிமுகமாகும் காட்சி கவிதையாய் உற்சாகமூட்ட, இருவருக்குமான காதல் கெமிஸ்ட்ரி போதுமான அளவில் இருக்கிறது.
கதையோட்டத்தின் சீரியஸான பக்கங்களைத் தாங்கிப் பிடிக்கிற கனமான கடமையை அட்டகாசமாக செய்துள்ளார் அஞ்சலி நாயர். அவரது ‘கருப்பட்டி’ நிறத்தை வைத்து போகிற போக்கில் பேசியிருக்கும் விஷயம் உருப்படியானது.
தனது ஏடாகூடமான அறிவியல் மூளையைப் பயன்படுத்தி ‘பிளாக் ஹோல்’ என்ற படு இன்ட்ரஸ்டிங்கான உலகை உருவாக்கி அதனுள் வசிக்கிறவராக குரேசி. டிரோன்ஸை அல்லக்கை போல் பயன்படுத்துவதிலிருந்து தரைக்கு சம்பந்தமேயில்லாத படிக்கட்டில் ஏறி பாத்ரூமுக்கு போவதுவரை அவரது அலப்பரை அட்டகாசம்.
தான் ஒருவரை காதலிப்பதாக சொன்னால் அவருக்கு அப்போதே ஆயுள் முடிந்து விடும் என்கிற பிரச்சனையைச் சுமந்து நாட்களை கடத்துகிற காவல்துறை அதிகாரியாக ‘சினிமாவாலா’ சதீஷ். அவருக்கிருக்கும் பிரச்சனையை கிளைமாக்ஸில் பயன்படுத்தியிருக்கும் விதம் கவர்கிறது.
சூனியக்காரியாக கெட்டப்பிலும் சற்றே மிரட்டலான நடிப்பிலும் கவனம் பெறுகிறார் தேவதர்ஷினி. டிராவிட் செல்வம், அஞ்சலியோடு விநோத வீட்டில் அவதிப்படும் இன்னொரு நபராக ஆர் ஜே தீபக் உள்ளிட்டோரின் பங்களிப்பு கச்சிதம்.
ஹரி எஸ்.ஆர். இசையில் ‘அஸ்கு மச்சா’, ‘டெரர் எரர்’ பாடல்களில் துள்ளல் அதிகம். பின்னணி இசை கதையோட்டத்துக்கு எனர்ஜியை அள்ளிக் கொடுத்திருக்கிறது.
விசித்திர உலகை கட்டமைத்த கலை இயக்குநரும், அதில் நடக்கும் சம்பவங்களை நேர்த்தியான கோணங்களில் பதிவு செய்திருக்கும் ஒளிப்பதிவாளர் ஜெயந்த் சேது மாதவனும் தனியாக பாராட்டப்பட வேண்டியவர்கள்.
இந்தப் படம் தனது பொழுதுபோக்குத் தன்மையிலும் உயர்தரமான உருவாக்கத்திலும் டிஸ்னியின் படங்களுக்கே சவால் என்றால் அது உண்மை. இந்த அற்புதமான சிரிஷ்டியை திரையரங்கில் குடும்பத்துடன் பார்த்து கொண்டாடி மகிழுங்கள்..
மதிப்பெண் 4.1 /5
.jpeg%3F2026-10-16T15%253A18%253A25.261Z&w=3840&q=75&dpl=dpl_7cxUzLVwFHrf51vFT3Ui1zLUj2Ur)
.jpeg%3F2026-10-16T15%253A18%253A29.585Z&w=3840&q=75&dpl=dpl_7cxUzLVwFHrf51vFT3Ui1zLUj2Ur)
.jpeg%3F2026-10-16T15%253A18%253A32.531Z&w=3840&q=75&dpl=dpl_7cxUzLVwFHrf51vFT3Ui1zLUj2Ur)
கருத்துகள் (0)
ஏற்றுகிறது…



-600x400.webp%3F2026-10-04T14%253A25%253A19.452Z&w=3840&q=90&dpl=dpl_7cxUzLVwFHrf51vFT3Ui1zLUj2Ur)